நடிகர் விஜய் முதல்முறையாக 3 வேடங்களில் நடித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற “மெர்சல்” படம் ரிலீசாகி இன்றோடு 6 ஆண்டுகள் நிறைவடைகிறது. 


அட்லீயோடு தொடர்ந்த பயணம் 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமல்லாமல், ரசிகர்களால் அடுத்த சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படுகிறார் விஜய். அவரின் சினிமா கேரியரில் கடந்த 10 ஆண்டுகளை எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு படமும் மிகப்பெரிய பிரச்னையை சந்தித்த பின்னரே ரிலீசாகும். வழக்கமாக மாநில அரசுடன் மோதி வந்த விஜய், மத்திய அரசுடன் “மெர்சல்” படத்தில் மோதினார். 


தெறி படத்தின் வெற்றியால் இயக்குநர் அட்லீயுடன் நடிகர் விஜய் இரண்டாவது முறையாக இப்படத்தில் கூட்டணி அமைத்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, கோவை சரளா, சத்யராஜ் என பலரும் மெர்சல் படத்தில் இணைந்திருந்தனர். 


படத்தின் கதை


ராஜா ராணியில் இயக்குநரான அட்லீ, கடைசியாக இந்தியிம் ஷாரூக்கானை வைத்து ஜவான் வரை மொத்தம் 5 படங்களை இயக்கியுள்ளார். இந்த 5 படங்களும் மிகப்பெரிய அளவில் சர்ச்சையானது. அதாவது மௌன ராகம் படம் ராஜா ராணியாகவும், சத்ரியன் படம் தெறியாகவும் எடுக்கப்பட்டதாக ரசிகர்கள் விமர்சித்தனர். இப்படியான நிலையில் மெர்சல் வெளியானது. 


அப்பாவை கொன்ற வில்லனை இரட்டையர்களாக பிறந்த மகன்கள் கொல்வதே இப்படத்தின் கதையாகும். சொல்லப்போனால் கமல்ஹாசன் 3 வேடங்களில் நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற “அபூர்வ சகோதரர்கள்” படம் தான் மெர்சலாக மெருகேற்றப்பட்டதாக தாறுமாறாக அட்லீ விமர்சிக்கப்பட்டார். இதில் மருத்துவ துறையில் நடக்கும் ஊழலை சேர்த்து ரசிகர்களை மெய் சிலிர்க்க செய்திருந்தார். 


வெற்றி - மாறன் - வெற்றி மாறன் 


மெர்சல் படத்தில் வெற்றி - மாறன் - வெற்றி மாறன் என 3 கெட்டப்புகளில் நடித்திருந்தார். அதிலும் பிளாஷ்பேக் காட்சியில் வரும் அப்பா விஜய்யான வெற்றி மாறன் கேரக்டர் ரசிகர்களை மிகவும் கவர்ந்திருந்தது. தனது படங்களில் எம்ஜிஆர் பாணியை பின்பற்றும் விஜய், வெற்றிமாறன் கேரக்டர் அறிமுக காட்சியில் பின்னணியில் எம்ஜிஆர் படம் ஓட நடந்து வரும் காட்சிக்கு தியேட்டரில் சில்லறையை சிதற விட்டவர்கள் அதிகம். இந்த படத்தின் மூலம் இளைய தளபதியாக இருந்த விஜய் தளபதி விஜய் ஆக மாறினார். 


மேலும் ஏ.ஆர்.ரஹ்மானின் துள்ளல் இசையில் உருவான “ஆளப்போறான் தமிழன்” .. உலகம் முழுவதுமிருக்கும் ஒவ்வொரு தமிழர்களின் உணர்வுகளை தட்டி எழுப்பியிருந்தது. 3 ஹீரோயின்கள் இருந்தாலும் க்யூட்டான் ஐஸ் (ஐஸ்வர்யா) ஆக நித்யா மேனன் ரசிகர்களை கவர்ந்திருந்தார். 


சண்டைக்கு வந்த பாஜக 


மெர்சல் படத்தில் மருத்துவ துறையில் நடக்கும் ஊழலை பற்றி கிளைமேக்ஸ் காட்சியில் பேசியிருப்பார் விஜய். அதேபோல் ஜிஎஸ்டி மற்றும் பண மதிப்பிழப்பு போன்ற விஷயங்களும் வசனமாக வைக்கப்பட்டிருந்தது. இதனைக் கண்டு தமிழக பாஜகவினர் கொந்தளித்தனர். குறிப்பாக விஜய் மீது மத ரீதியான விமர்சனம் முன்வைக்கப்பட்டது. ஜோசப் விஜய் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குறிப்பிட்டது சர்ச்சைகளை உண்டாக்கியது. தமிழ்நாடு பாஜக செய்த விமர்சனத்தால் மெர்சல் படம் இந்திய அளவில் ட்ரெண்டானது. ராகுல் காந்தியும் தன் பங்குக்கு ஆதரவு தெரிவித்தார். இப்படி சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தாற்போல மெர்சல் சினிமாவுலகில் பாஜக செய்த எதிர்மறை கருத்துகளால் நிஜமாகவே மெர்சல் காட்டியது குறிப்பிடத்தக்கது.