சமீப காலமாக தமிழில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகி வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் இதுவரை கில்லி, பில்லா, ஆளவந்தான், உள்ளிட்ட பல படங்கள் ரிலீஸ் ஆகி உள்ளன. கடைசியாக விஜய் நடித்த சச்சின் திரைப்படம் ரீ -ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது.
இதை தொடர்ந்து தற்போது, விஜய்யின் 51வது பிறந்தநாளை (ஜூன்-22) சிறப்பிக்கும் விதமாக அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2017ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற மெர்சல் திரைப்படம் இன்று (ஜூன்-20) தமிழகமெங்கும் நூற்றுக்கணக்கான திரையரங்குகளில் (Sparrow Cinemas) ஸ்பேரோ சினிமாஸ் கார்த்திக் வெங்கடேசன் வெளியிட்டுள்ளர்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான திரையரங்குகளில் இந்த படம் திரையிடப்பட்டாலும் அனைத்து இடங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு ஹவுஸ்புல் போர்டுடன் காட்சியளிக்கிறது. இத்தனைக்கும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள குபேரா திரைப்படமும் இன்று தான் வெளியாகி இருக்கும் சூழலில், ‘மெர்சல்’ படத்தின் ரீ ரிலீஸ் ஒரு புதிய விஜய் படத்திற்கு இணையாக டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டி இருக்கிறது.
தளபதி விஜய் முதன்முறையாக மூன்று வேடங்களில் நடித்த பெருமையை மெர்சல் படம் அவருக்கு பெற்று தந்தது. இயக்குனர் அட்லீயும் தான் கற்றுக் கொண்ட மொத்த வித்தையையும் இந்த படத்தில் இறக்கி வைத்து தளபதி ரசிகர்களுக்கு மட்டுமல்ல, படம் பார்க்கும் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் விருந்தளிக்கும் விதமாக இந்த படத்தை உருவாக்கி இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் வடிவேலு இதில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார். மற்றும் படத்தில் நடித்த எஸ்ஜே சூர்யா, காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், ஹரிஷ் பெராடி, யோகிபாபு உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்திருந்தனர். ஏ ஆர் ரகுமானின் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.