AI தொழில்நுட்பம் மூலம் எடிட் செய்யப்பட்ட விஜய் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியை தொடங்கி விட்டார். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற பேச்சு மிகப்பெரிய அளவில் எழுந்தது. அதற்கேற்றாற்போல விஜய்யின் செயல்பாடுகளும் இருந்ததால் பலரும் அவரின் அரசியல் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தனர். இப்படியான நிலையில் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி தான் அரசியலுக்கு வரப்போவதாக விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அதேசமயம் அரசியல் மற்றும் மக்கள் பணியில் முழுநேரம் ஈடுபட வேண்டியிருப்பதால் தனது 69வது படத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகவுள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் இல்லாத தமிழ் சினிமாவை நினைத்து பார்க்க முடியவில்லை என ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலக பிரபலங்கள் கூட வேதனை தெரிவித்து வருகிறார். அதேசமயம் மாற்றம் தேவை என நினைக்கும் பலரும் விஜய்யின் அரசியல் வருகையை வரவேற்றுள்ளனர்.
இப்படியான நிலையில் சமீப காலமாக AI தொழில்நுட்பம் மூலம் எடிட் செய்யப்பட்ட வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. அதேசமயம் சர்ச்சைகளை கிளப்பும் வீடியோக்களும் உருவாக்கப்பட்டு வருகின்றது. இப்படியான நிலையில் நடிகர் விஜய்யின் எடிட் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. அதில் சூர்யவம்சம் படத்தில் சரத்குமார் பேசும் மேடை பேச்சு காட்சிகளில் விஜய் முகம் வைத்து எடிட் செய்யப்பட்டுள்ளது.
மேலும், ‘என்னை புள்ளையா பெத்ததுக்கு எங்க அப்பாதான் தவம் பண்ணியிருக்கணும் சொல்வாங்க. ஆனால் அவரை அப்பாவா கிடைச்சதுக்கு நான் தான் தவம் பண்ணியிருக்கணும்” என ஒரிஜினல் வசனங்கள் படத்தில் இடம் பெற்றிருக்கும். ஆனால் அதற்கு பதிலாக எடிட் செய்யப்பட்ட வீடியோவில், “அவருக்கு புள்ளையா பொறந்ததுக்கு நான் தான் தவம் பண்ணியிருக்கணும் சொன்னாங்க. ஆனால் என்னை புள்ளையா பெத்ததுக்கு எங்க அப்பா தான் தவம் பண்ணியிருக்கணும்” என வசனம் இடம் பெற்றுள்ளது. இது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. பலரும் அதில், “வீடியோ எடிட் பண்ணதெல்லாம் ஓகே தான். ஆனால் வசனத்தை மாத்தி வச்சிங்க பாருங்க..அங்க இருக்கு உங்க திறமை” என கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
ஏற்கனவே விஜய்க்கும், அவரது அப்பா இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லை என சொல்லப்பட்டு வரும் நிலையில் இந்த வீடியோ ட்ரெண்டாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.