தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாக வலம் வந்த குயிலி சின்னத்திரையில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1983 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தூங்காதே தம்பி தூங்காதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடன கலைஞராக குயிலி அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 1984 ஆம் ஆண்டு வெளியான பூவிலங்கு படத்தில் நடிகையாக அறிமுகமான குயிலி அதன் பின் டிசம்பர் பூக்கள், ஆயிரம் பூக்கள் மலரட்டும், பாரு பாரு பட்டணம் பாரு உள்ளிட்ட சில படங்களில் முதன்மை வேடத்தில் நடித்தார்.
1987 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான நாயகன் படத்தில் இடம் பெற்ற நிலா அது வானத்து மேலே என்ற பாடலை நடனமாடி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து கமல்ஹாசன், கார்த்திக்,விஜயகாந்த், பிரசாந்த், தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் சின்னத்திரையில் கால் பதித்த குயிலி வாழ்க்கை, அண்ணி, அண்ணாமலை, சொர்க்கம், கோலங்கள், கனா காணும் காலங்கள், மேகலா,அன்பே வா, முந்தானை முடிச்சு, சாந்தி நிலையம், சரவணன் மீனாட்சி ,கல்யாண முதல் காதல் வரை, நினைத்தாலே இனிக்கும், என பல சீரியல்களில் தனது நடிப்புத் திறமையால் தனி ரசிகர்களை கொண்டுள்ளார்.
இப்படியான நிலையில் நடிகை குயிலி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க உள்ளார். கலைஞர் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சிக்கு வாழ்ந்து காட்டுவோம் என பெயரிடப்பட்டுள்ளது. குடும்பம் மற்றும் கணவன் மனைவிக்குள்ளான பிரச்சனைகளுக்கு உளவியல் மற்றும் சட்ட ரீதியாக ஆலோசனை வழங்குவது பற்றிய நிகழ்ச்சியாக வாழ்ந்து காட்டுவோம் ஒளிபரப்பாக உள்ளது. இது தமிழில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை, நேர்கொண்ட பார்வை போன்ற வரிசையிலான நிகழ்ச்சியாகும்.
குடும்ப உறவுகளில் எழும் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்ட சொல்வதெல்லாம் உண்மை அளவுக்கு இந்த நிகழ்ச்சிக்கு இருக்குமா என்பது குயிலி இந்த நிகழ்ச்சியில் எழும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை பொறுத்து இருக்கும் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
மேலும் படிக்க: Ghilli Re-release: மீண்டும் களத்தில் இறங்கும் வேலு.. கில்லி படம் ரீ-ரிலீஸ் பற்றி வெளியான அறிவிப்பு!