தளபதி 69 அப்டேட்:


நடிகர் விஜய் அரசியலில் இறங்குவதற்கு முன்னர் நடிக்க ஒப்பந்தமான 'தி கோட்' படம் தற்போது விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி நடந்து வருகிறது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


அதை தொடர்ந்து இறுதியாக ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் கூட்டணி 'தளபதி 69' படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் இணைய உள்ளார் 'பிரேமலு' புகழ் மமிதா பைஜு என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தின் விஜய் ஜோடியாக சமந்தா நடிக்க உள்ளார் என்றும் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


விஜய் கொடுத்த ஷாக் :


நடிகர் விஜயின் 68வது படமாக வெங்கட் பிரபு இயக்கியுள்ள 'தி கோட்' படம் உருவாகி வருகிறது. ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.


பிரபுதேவா , பிரசாந்த் , சினேகா , மீனாக்‌ஷி செளதரி உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார்கள். வரும் செப்டம்பர் 5ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதுவரையில் வெளியான மூன்று பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 


மும்மரமாக தயாராகி வரும் 'தி கோட்' படத்தை பார்த்த நடிகர் விஜய், வெங்கட் பிரபுவை கட்டியணைத்து “கலக்கிட்ட…அவசரப்பட்டு ரிட்டையர்மெண்ட் அறிவிச்சுட்டேன்…இன்னொரு படம் உன் கூட பண்ணிருக்கலாம்” என கூறியதாக சினிமா ஆர்வலர் அபிஷேக் ராஜா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். 


இழப்பீடு கேட்ட இளையராஜா :


கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மலையாளத்தில் வெளியாகி 200 கோடிக்கும் மேல் வசூல் செய்த படம் மஞ்சுமெல் பாய்ஸ். இது மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் அனுமதியின்றி 'குணா' படத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போடு காதலன்... பாடலை பயன்படுத்தியதற்காக மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.


தன்னுடைய அனுமதியின்றி பாடலை பயன்படுத்தியதால் சட்ட விரோதமானது என இளையராஜா அனுப்பிய நோட்டீஸில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கு இழப்பீடாக 2 கோடி இளையராஜா கேட்டு இருந்த நிலையில் பின் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் ரூ.60 லட்சம் இழப்பீடாக தயாரிப்பு நிறுவனம் வழங்கியுள்ளது. 


விஜய் ஆண்டனி :


விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி வெளியான திரைப்படம் 'மழை பிடிக்காத மனிதன்'. இப்படத்தில் முதல் நிமிடத்தில் வரும் காட்சிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், அது படத்தில் எப்படி இணைக்கப்பட்டது என்று தனக்குத் தெரியாது என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் விஜய் ஆண்டனி. இது தொடர்பாக விஜய் ஆண்டனி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருந்தார் சினிமா ஆர்வலரான ப்ளூ சட்டை மாறன்.


இது குறித்து அறிக்கை மூலம் விளக்கம் அளித்த விஜய் ஆண்டனி “மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தின் துவக்கத்தில் வரும் ஓர் அறிமுக காட்சி குறித்து தயாரிப்பாளர்களும் இயக்குநரும் கலந்து பேசி அதை இன்று முதல் திரையரங்குகளில் நீக்கி விடுவதென முடிவு எடுத்துவிட்டனர்.


இந்த பிரச்சனை முடிந்து விட்டது என்பதை மகிழ்ச்சியுடன் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறி இப்படத்துக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். 


ஏ.கே.64 அப்டேட் :


அஜித்குமார் தற்போது மகிழ் திருமேனியின் 'விடாமுயற்சி' மற்றும் ஆதிக் ரவிச்சந்திரனின் 'குட் பேட் அக்லி' படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கே.ஜி.எஃப், சலார் படங்களின் மூலம் பிரபலமான இயக்குநர் பிரஷாந்த் நீல் கூட்டணியில் அஜித் அடுத்தடுத்து இரண்டு படங்களில் இணைய உள்ளார் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தன. ஆனால் அந்த கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை.


இருப்பினும் பிரஷாந்த் நீல் கூட்டணியில் இணைவதற்கு முன்னர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் படம் ஒன்றில் அஜித் நடிக்க  உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அது தான் AK64 படமாக இருக்கும் என கூறப்படுகிறது.