தளபதி 68 படத்தின் மூலம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் மற்றும் யுவன் சங்கர் ராஜா கூட்டணி இணைவது உறுதியாகியுள்ளது.


விஜய் வெளியிட்ட வீடியோ:


 நடிகர் விஜய் தனது அடுத்த படம் தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ”சுடோகு போன்ற ஒரு கட்டத்தின் மூலம், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் தனது 25 திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் தளபதி 68 திரைப்படம் உருவாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மங்காத்தா மற்றும் மாநாடு போன்ற மெகாஹிட் படங்களை கொடுத்த, வெங்கட் பிரபு முதன்முறையாக விஜய்யுடன் இணைய உள்ளார்.


முன்னதாக, அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான, பிகில் திரைப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, இந்த அறிவிப்பின் மூலம், புதிய கீதை திரைப்படத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு யுவன் சங்கர் ராஜா உடன் சேர்ந்து விஜய் முதல் முறையாக பணியாற்ற உள்ளார். 


20-ஆண்டுகளுக்கு முன் விஜய் - யுவன் கூட்டணி:


2003ஆம் ஆண்டு நடிகர் விஜய்யின் ‘புதிய கீதை’ படத்துக்கு இளைஞராக இருந்த யுவன் சங்கர் ராஜா இறுதியாக பாடல்கள் அமைத்திருந்த நிலையில், அதன் பிறகு அவர் விஜய்யுடன் கூட்டணி சேரவில்லை. அதேநேரம், தமிழ் திரைப்படத்துறையில் விஜய்க்கு பெரும் போட்டியாளராக கருதப்படும் அஜித்தின் பல படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.


அஜித்தின் ஆதர்ஷ இசையமைப்பாளராக மாறி பில்லா, மங்காத்தா மற்றும் ஆரம்பம் போன்ற பல படங்களில் யுவன் சங்கர் ராஜா போட்ட தீம் மியூசிக், இன்றளவும் பல திரைப்பட ரசிகர்களின் ரிங்-டோன் ஆகவே உள்ளது. யுவன் சங்கர் ராஜாவின் இசைக்காகவே பல படங்கள் வெற்றி பெற்ற வரலாறும் உள்ளது. ஆனாலும், விஜய் உடன் மற்றும் அவர் சேர்ந்து பணியாற்றாமல் இருந்தது பல ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே இருந்தது. இந்நிலையில் தான் 20 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் உடன் தளபதி 68 படத்தின் மூலம், யுவன் சங்கர் ராஜா சேர்ந்து பணியாற்ற உள்ளார்.


விஜய் - அனிருத் கூட்டணி:


இதனிடையே, விஜய் தனது படங்களில் முன்னணி இசையமைப்பாளர்கள் பலருடன் சேர்ந்து பணியாற்றினாலும், அனிருத் உடனான கூட்டணி மிகவும் முக்கியமானது. இந்த கூட்டணி முதன்முறையாக கத்தி படத்தில் இணைய, அந்த படத்தின் ஆல்பம், பெரிய ஹிட் அடித்தது. அதை தொடர்ந்து, விஜய்யின் மாஸ்டர், பீஸ்ட் மற்றும் தற்போது உருவாகி வரும் லியோ படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்கிறார். இதனால், விஜய்யின் 68வது படத்திற்கும் அனிருத் தான் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த பொறுப்பை யுவன் சங்கர் ராஜா ஏற்றுள்ளார்.