நடிகர் விஜய் இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் முதன்முறையாக கைக்கோர்த்துள்ள திரைப்படம் ‘தளபதி 68’ லோகேஷ் கனகராஜ் உடன் நடிகர் விஜய் கைக்கோர்த்த லியோ திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி 500 கோடிகளுக்கு மேல் வசூலித்தது.


தளபதி 68 ஷூட்டிங்


கலவையான விமர்சனங்களைத் தாண்டி இப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் வசூலை அள்ளிய நிலையில், படம் முடிந்த சூட்டோடு விஜய் - வெங்கட் பிரபு இணையும் படத்தின் பூஜை நடைபெற்றது. விஜய்யுடன் நடிகர்கள் பிரசாந்த்,  பிரபுதேவா, மோகன், அஜ்மல், பிரேம் ஜி, வைபவ், நடிகைகள் மீனாட்சி சௌத்ரி, சினேகா, லைலா என பெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது.


சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தின் பல பகுதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில், தளபதி 68 திரைப்படம் பிரபல ஹாலிவுட் படத்தின் ரீமேக் எனும் தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.


டைம் ட்ராவல் ஹாலிவுட் பட ரீமேக்


2012ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ஹாலிவுட் திரைப்படம் ‘லூப்பர்’.  ரியான் ஜான்சன் இயக்கத்தில் சைன்ஸ் ஃபிக்‌ஷன் பாணியில் வெளியான இப்படம், டைம் ட்ராவலை மையப்படுத்தி அமைந்திருந்தது. 


2044ஆம் ஆண்டு நடக்கும் வகையில் இந்தக் கதை அமைந்திருந்தது. எதிர்காலத்தில் இருந்து பயணித்து வரும் நபர்களைக் கொல்ல உருவாக்கப்படும் கொலைகார கும்பல், அதில் இயங்கும் ஹீரோ, அவருக்கு எதிர்காலத்தில் இருந்து பயணித்து வரும் தன்னைத் தானே கொல்லும் பணி வழங்கப்படுவது, அதனை ஒட்டி நடக்கும் குழப்பங்கள், சுவாரஸ்யங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இப்படம் அமைந்திருந்தது.


இந்நிலையில், நடிகர் விஜய்யின் தளபதி 68 திரைப்படம் லூப்பர் திரைப்படத்தின் ரீமேக் தான் என கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.


 



ஸ்டைலிஷ் முயற்சி


சமீப ஆண்டுகளாக விஜய் ஆக்சன் படங்களிலேயே புதுமையான, ஸ்டைலிஷான முயற்சிகளை  மேற்கொண்டு வருகிறார் . ‘லியோ’ திரைப்படம் ‘ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ்’ படத்தின் ஸ்டைலிஷான தமிழ் ரீமேக்காக இருந்த நிலையில், இப்படமும் அவ்வாறே இருக்கும் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.


முன்னதாக விஜய்யும் வெங்கட் பிரபுவும் டீ - ஏஜிங் தொழில்நுட்பத்துகாக அமெரிக்கா சென்று வந்த நிலையில், லூப்பர் படத்தின் ரீமேக் என்பதால் தான், டைம் ட்ராவல் செய்து எதிர்காலத்தில் இருந்து முன்னோக்கி பயணிக்கும் விஜய்யை உருவாக்க படக்குழு முழுவீச்சில் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.


லியோ படத்தைத் தொடர்ந்து இப்படமும் ஹாலிவுட் பாணியில் இருக்கும் எனும் தகவலால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் வெங்கட் பிரபு ஏற்கெனவே தன் ஸ்டைலிஷான பாணி படங்களுக்காக பேர் போனவர் எனும் நிலையில், அவர் இயக்கத்தில் வரும் டைம் ட்ராவல் திரைப்படம் எனும் இந்தத் தகவல் தற்போது விஜய் ரசிகர்களை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


மேலும் படிக்க: Diretor RA Venkat: “மொத்தமா டிக்கெட் வாங்கறதா சொல்லியும் ஷோ போடல” : கிடா பட இயக்குநர் வேதனை..


Kaathal The Core: மம்மூட்டியுடன் பிரச்னை.. வசனங்களே இன்றி கவனம் ஈர்த்த ஜோதிகா.. ‘காதல் தி கோர்' ட்ரெய்லர் எப்படி?