நடிகர் காளி வெங்கட் நடிப்பில் வெளியாகியுள்ள “கிடா” படத்துக்கு சரியாக தியேட்டர்கள் கிடைக்கவில்லை என அப்படத்தின் இயக்குநர் ரா.வெங்கட் தனது பேஸ்புக் பக்கத்தில் ஆதங்கப்பட்டுள்ளார். 


ஸ்ரீ ஸ்வரந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா.வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “கிடா”. இந்த படத்தில் பூ ராமு, காளி வெங்கட், மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். ஒரு சிறுவன், அவனது தாத்தா மற்றும் ஆட்டுக்கு இடையிலான உறவு பிணைப்பை சொல்லும் படமாக உருவாகியுள்ள கிடா படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய பாராட்டைப் பெற்றுள்ளது. 


இந்த படம் தீபாவளில் வெளியீடாக கடந்த நவம்பர் 11 ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. ஆனால் தீபாவளி ரிலீஸாக ஜப்பான், ஜிகர்தண்டா 2, டைகர் 3, ரெய்டு, தி மார்வல்ஸ் ஆகிய படங்கள் வெளியானதால் கிடா படத்துக்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்கவில்லை. அதேசமயம் பெரிய அளவில் விளம்பரப்படுத்துதல் இல்லாததால் இப்படி ஒரு படமே ரிலீசானது பலருக்கும் தெரியவில்லை. அப்படியே படத்தின் விமர்சனங்களை பார்த்து படம் பார்க்க சென்றால் பெரிய அளவில் டிக்கெட் விற்பனை இல்லை என கூறி காட்சி ரத்து செய்யப்படுவதாக கூறப்படுகிறது. 



இந்நிலையில் இதுதொடர்பாக கிடா படத்தின் இயக்குநர் ரா. வெங்கட் தனது பேஸ்புக் பக்கத்தில் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில், “இன்று காலை என் நண்பர்கள் இருவர் கிடா படம் பார்க்க காசி டாக்கீஸ் போயிருக்கிறார்கள்.. கூடவே ஒரு எட்டு பேரும் கிடா எடுக்க வந்திருக்கிறார்கள் ஆனால் தியேட்டர் நிர்வாகம் பதினைந்து பேர் இருந்தால் தான் படம் போடுவோம் என்றிருக்கிறார்கள்.. நண்பர்கள் பரவாயில்லங்க பதினைஞ்சு டிக்கெட் தான நாங்களே இ்ன்னும் அஞ்சு டிக்கெட் எடுக்கிறோம்னு சொல்லியும் படம் போடல.. ஷோ கேன்சல்... எங்கோ ரிவியூ படிச்சிட்டு படம் பார்க்க வர்றவங்ககிட்ட என்ன பதில் சொல்றதுன்னு எனக்கும் தெரியல..


நல்ல படம்னு தேடி வந்தோம்னு சொல்றாங்க.. ஆனா ஷோ கேன்சல்.. இப்படிலாம் நடக்கும்னு தெரிஞ்சு தான சின்னபடங்கள் வருதுன்னு நீங்க சொல்லவர்றது தெரியுது.. ஆனா ஆதங்கத்த எங்க கொட்டுறது .. அதான் இத ஷேர் பண்ணுனேன்.. மதுரையில ஒரு ஷோ தான் குடுத்தாங்க அங்கயும் இப்ப ஷோ காட்டல.. மக்களே உங்களின் அருகே எதோ ஒரு ஷோ கிடா ஓடுச்சுன்னா போய் பாருங்க.. கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும்.. நன்றி” என தெரிவித்துள்ளார்.