நடிகர் விஜய் நடிக்கும் 68வது படத்தின் அப்டேட்டுகள் நாளை முதல் வெளியாகும் என ஏஜிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில்  கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி லியோ படம் வெளியாகி தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கிட்டதட்ட வசூலில் ரூ.400 கோடியை கடந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இப்படத்தை காண ரசிகர்களுக்கு தியேட்டர்களுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். இப்படியான நிலையில் விஜய் அடுத்ததாக ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் தனது 68வது படத்தில் நடிக்கிறார். பிகில் படத்திற்கு பிறகு ஏஜிஎஸ் நிறுவனம் மீண்டும் விஜய்யை வைத்து படம் எடுப்பதால் திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 


இப்படத்தின் மூலம் முதல்முறையாக இயக்குநர் வெங்கட் பிரபு விஜய்யுடன் இணைகிறார். இதனால் ரசிகர்களின் 13 ஆண்டு கால ஏக்கம் நிறைவடைந்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைக்க உள்ளார். தளபதி 68 என இப்படத்துக்கு தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. மேலும் ஜெய், அபர்ணா தாஸ், பிரபுதேவா, வைபவ், லைலா  ஆகியோரோடு நடிகர்கள் மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 






மீனாட்சி சௌத்ரி இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். இதனிடையே லியோ படம் ரிலீசான பிறகு தளபதி 68 படத்தின் அப்டேட்டுகள் வெளியாகும் என இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார். அதன்படி நாளை முதல் அப்டேட்டுகள் வெளியாகும் என ஏஜிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் விஜயதசமியை முன்னிட்டு தளபதி 68 படத்தின் பூஜை வீடியோ நண்பகல் 12.05 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பூஜை கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.