லியோ படத்துக்குப் பிறகு இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் தளபதி 68 படத்தில் இணையவிருக்கிறார் நடிகர் விஜய். விஜய்யும் வெங்கட் பிரபுவும் முதன்முதலாக ஒன்றிணையும் நிலையில் இப்படத்தின் மீது எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன. இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இணைகிறார்.
விறுவிறுப்பான தொடக்க பணிகள்
லியோ படம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ள நிலையில், மற்றொருபுறம் தனது அடுத்த படத்துக்கான பணிகளை விஜய்யும் வெங்கட்பிரபுவும் வெற்றிகரமாக தொடங்கியுள்ளனர். இப்படத்துக்கான விஎஃப்எக்ஸ் பணிகளுக்காக இருவரும் அமெரிக்கா சென்றுள்ள நிலையில் அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அப்பா - மகன் என இரட்டை வேடங்களில் விஜய் இப்படத்தில் நடிப்பதாகக் கூறப்படும் நிலையில், ஜோதிகாவும், பிரியங்கா மோகனும் நடிப்பதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், ஜோதிகா இந்தப் படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளதாகவும், அவருக்கு பதிலாக இப்படத்தில் சிம்ரன் அல்லது சினேகா நடிக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நோ சொன்ன காரணம்...
ஏற்கெனவே அட்லீ இயக்கிய மெர்சல் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஜோதிகாவிடம் கேட்கப்பட்டது. ஆனால் அப்போது அவர் விஜய்யுடன் நடிக்க அவர் மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது தளபதி 68 படத்தில் நடிக்க கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட நிலையில், ஜோதிகா நோ சொன்னதாக வெளியாகியுள்ள தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
அப்பா விஜய் கதாபாத்திரங்களுக்காக தொடர்ந்து ஜோதிகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதால் இதுதான் காரணம் என்றும், ஒருவேளை மெய்ன் ஹீரோயினாக நடிக்க அணுகப்பட்டிருக்கலாம் என்றும் கோலிவுட் வட்டாரத்தினர் பேசி வருகின்றனர். விஜய் - ஜோதிகா இருவரும் குஷி, திருமலை ஆகிய படங்களில் இதுவரை இணைந்து நடித்துள்ளனர்.
வைரல் ஃபோட்டோ
தளபதி 68 படத்தில் நடிகர் ஜெய், நடிகை அபர்ணா தாஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
தளபதி 68 படத்தில் டீ ஏஜிங் தொழில் நுட்பம் மூலம் விஜய்யின் வயதை குறைத்துக் காட்டும் முயற்சிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. இதற்காக கலிஃபோர்னியாவில் உள்ள USC ICT எனும் ஒரு கல்லூரிக்கு விஜய் - வெங்கட் பிரபு இருவரும் விசிட் அடித்துள்ளனர்.
இதற்கு முன்னதாக நடிகர் அமீர் கான் நடித்த லால் சிங் சத்தா படத்திலும், கமல்ஹாசன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும் இந்தத் தொழில்நுட்பம் உபயோகிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் தற்போது உள்ள விஜய்யின் ஃபேன்பாய் மொமண்டை வெங்கட் பிரபு தன் சமூக வலைதளப் பக்கத்தில் நேற்று பகிர்ந்த நிலையில், இந்த ஃபோட்டோ வைரலானது.
நடிகர் டென்ஸல் வாஷிங்டன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஈக்குவலைசர் 3 படத்தை FDFS பார்த்து விஜய் தியேட்டரில் ஆரவாரம் செய்த புகைப்படத்தை வெங்கட் பிரபு பகிர்ந்த நிலையில், இந்த ஃபோட்டோ நேற்று கடும் வைரலானது குறிப்பிடத்தக்கது.