நடிகர் விஜயின் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. படத்தின் ப்ரமோஷனுக்காக  வித்தியாசமான யுக்திகளை கையில் எடுத்துள்ள படக்குழுவினர், ப்ரோமோஷனின் ஒரு பகுதியாக சென்னை மெட்ரோ ரயிலில் வாரிசு திரைப்படத்தின் போஸ்டர்களை ஒட்டி விளம்பரப்படுத்தி உள்ளனர். 






இதற்கு முன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் வெளியான விக்ரம் திரைப்படத்திற்கு, ரயிலில் ப்ரொமோஷன் செய்தது குறிப்பிடத்தக்கது. 


ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இப்படம் பொங்கலுக்கு வெளியாக தயாராக உள்ளது.






'வாரிசு’ படம் 2023 பொங்கல் விருந்தாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான பணிகளில் படக்குழு முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது.


இன்னும் பட வெளியீட்டுக்கு சுமார் ஒரு மாத காலமே உள்ள நிலையில், ஜனவரி 12ஆம் தேதி அதாவது தைப் பொங்கலுக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக படம் வெளியாகலாம் எனத் தகவல்கள் முன்னதாக வெளியாகின. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், லண்டனில் ’வாரிசு’ படத்தின் டிக்கெட் புக்கிங் அடுத்த வாரத்தில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுவரை, ஒரு மாதத்துக்கு முன்பே எந்தவொரு படத்துக்காகவும் டிக்கெட் விற்பனை தொடங்கியது இல்லை. இந்நிலையில், வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகார்பூர்வ தகவலும் இதுவரை வராத சூழலில் லண்டனில் மட்டும் டிக்கெட் புக்கிங் குறித்த தகவல் வெளியாகிவுள்ளது.