ஃபிஃபா உலகக் கோப்பை போட்டிகள் அரைஇறுதியை நெருங்கியுள்ள நிலையில் ரசிகர்களிடம் மிகவும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அதில் நமது கோலிவுட் பிரபலங்களும் அடங்குவர். கோலிவுட் நடிகர் தலைவாசல் விஜய், இந்த ஃபிஃபா உலகக் கோப்பை போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக கத்தாருக்கு நேரடியாக சென்று பார்த்திருக்கிறார். 


 



 


வெறித்தனமான ரசிகர் :


தனது கல்லூரி நாட்கள் முதலே கால்பந்து விளையாட்டில் மிகவும் ஆர்வமுள்ள தலைவாசல் விஜய் ஜெர்மன் கால்பந்து அணியின் தீவிர ரசிகராம்.


பயண அனுபவம் குறித்து பேசிய அவர், “ இந்த முறை ஃபிஃபா உலகக் கோப்பையை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த பயணத்திற்காக நாங்கள் நவம்பர் 30ம் தேதி சென்று டிசம்பர் 7 தேதி திரும்பினோம்.


மூன்று போட்டிகளுக்கான டிக்கெட், ட்ராவல் மாற்றும் தங்குமிடம் என மூன்றுக்கும் சேர்த்து 2 லட்சத்துக்கு கீழ் தான் செலவானது. மேலும் ஜெர்மனி மற்றும் கோஸ்டாரிகா மேட்சை நாங்கள் ஸ்டேடியத்தின் ஓய்வறையில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு வெறித்தனமான ரசிகனாக என்ஜாய் செய்ய வேண்டும் என ஆசைப்பட்டேன். கத்தாரில் தமிழர்கள், மலையாளிகள், தெலுங்கு, இலங்கை மக்கள் என பலரும் அங்கு வசிக்கிறார்கள். பலரும் என்னுடன் செல்ஃபி எடுக்க விரும்பினர். அதனால் என்னுடைய வெறித்தனமான ஆசையை வெளிக்காட்ட முடியாமல் போனது. 


 


தோல்வியை தாங்காமல் சென்னை திரும்பிய நடிகர் :


ஆஸ்திரேலியா மற்றும் டென்மார்க், பிரான்ஸ் மற்றும் போலந்து இடையிலான போட்டி, ஜெர்மனி மற்றும் கோஸ்டாரிகா இடையேயான முக்கியமான போட்டி உள்ளிட்டவற்றை நேரடியாக பார்த்தேன். அந்த தருணம் என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம்.


ஜெர்மனி, ஜப்பானை மிகவும் ஈஸியாக எடுத்துக் கொண்டு அதிக நம்பிக்கையுடன் விளையாடியது தான் ஜெர்மனியின் தோல்வியை தழுவியதற்கு காரணம். அடுத்தாக கோஸ்டாரிகா உடன் விளையாடி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் என நம்பினோம். மறுபக்கம் ஜப்பான் ஸ்பெயினிடம் தோற்கும் பிறகு ஜெர்மனியும் ஸ்பெயினும் போட்டியிடும் என மிகவும் ஆர்வமாக இருந்தோம்.


ஆனால் நடந்தது நேர்மாறாக இருந்தது. ஸ்பெயின் ஜப்பானிடம் தோற்றது மறுபக்கம் ஜெர்மனி மூன்று கோல்கள் முன்னிலையில் இருந்தாலும் அவர்கள் தகுதி பெற வேண்டுமானால் மேலும் மூன்று கோல்களை அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். அதுவும் 15 நிமிடங்களில். கோஸ்டாரிகா ஜெர்மனியை அடிக்க விடாமல் செய்தது.


இதனால் ஜெர்மனி மற்றும் கோஸ்டாரிகா இரண்டும் உலக கோப்பையில் இருந்து வெளியேற நாங்களும் கனத்த இதயத்துடன் ஸ்டேடியத்தை விட்டு வெளியேறினோம். இந்த தோல்வியால் என்னால் அன்று இரவு தூங்கவே முடியவில்லை. நான் அடித்து சொல்கிறேன்  ஃபிஃபா உலகக் கோப்பையை  பிரான்ஸ் தான் வெல்லும்.” என்று பேசினார்.