நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள 170வது படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. 


தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி இயக்குனர் நெல்சன் இயக்கத்தில்  வெளியான திரைப்படம்  ஜெயிலர்.  இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதோடு ரூ.600 கோடி அளவில் வசூல் வேட்டை நிகழ்த்தியது. இந்த ஜெயிலர் படம் வெளியாவதற்கு முன்பே ரஜினிகாந்தின் தலைவர் 170-வது படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்குவார் என்ற அறிவிப்பை வெளியிட்டது லைகா நிறுவனம்.


இதனிடையே நேற்று (அக்டோபர் 1) முதல் தலைவர் 170வது படத்தின் அப்டேட்டுகள் வெளியாகி கொண்டிருக்கிறது. நேற்று தயாரிப்பாளர் சுபாஸ்கரன், இயக்குநர் டி.ஜே.ஞானவேல், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் இப்படத்தில் இணைந்துள்ளதாக தனித்தனியே  அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று லைகா வெளியிட்ட அப்டேட்டில், துஷாரா விஜயன் தலைவர் 170-ல் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் சர்ப்பட்டா பரம்பரை படத்தின் மூலம் பிரபலமானவர்.


இன்று அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என தெரிவித்திருந்த நிலையில், நடிகை ரித்திகா சிங் தலைவர் 170-ல் இணைய உள்ளாதாக லைகா அறிவித்துள்ளது. நடிகை ரித்திகா சிங் இறுதி சுற்று படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடத்தவர். 


மலையாள நடிகையும், அசுரன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த, நடிகை மஞ்சு வாரியர், தலைவர் 170-ல் இணைந்துள்ளதாக, லைகா அறிவித்துள்ளது. தொடர்ந்து தலைவர் -170 குறித்து அப்டேட்  வெளியாகலாம் என்று எதிர்பாக்கப்படுகிறது.