தீபாவளி என்றாலே புத்தாடை, பட்டாசு, பலகாரம் என ஒரே கொண்டாட்டம் தான். அதிலும் தல தீபாவளி என்றால் சொல்லவா வேண்டும்..!


திருமணமான ஜோடி திருமணத்திற்கு பின் கொண்டாடும் முதல் தீபாவளி தான் தல தீபாவளி. பெண் வீட்டார் தனது மகள் மற்றும் மருமகனுக்கு தல தீபாவளி பரிசாக புத்தாடைகள், புது நகைகள், இனிப்பு பலகாரங்கள், பரிசு பொருட்களை என வழங்கி மகிழ்விப்பார்கள். புதுமண ஜோடிகளும் மகிழ்ச்சியுடன் இந்நாளை கொண்டாடுவர். அந்த வகையில் இந்த வருடம் தல தீபாவளி கொண்டாட இருக்கும் செலிபிரிட்டி ஜோடிகள் யார் யார் என்று தெரியுமா? வாங்க பார்க்கலாம்…


முதல் ஜோடி நம்ம நயனும் விக்கியும் தான்! 




லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது காதலன் இயக்குநர் விக்னேஷ் சிவனை இந்த ஆண்டு ஜுன் மாதம் 9 ஆம் நாள் கரம் பிடித்தார். நயன்தாரா விக்னேஷ் சிவனின் கல்யாணம் வெகுவிமரிசையாக சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. கல்யாணம் முடிந்த கையோடு தொடர்ந்து ஹனிமூன் சென்ற வண்ணம் இருந்து வந்தனர்  இந்த ஜோடி‌. நயனும் விக்கியும் தல தீபாவளியை தங்கள் இரட்டை குழந்தைகளுடன் கொண்டாட உள்ளனர். அட ஆமாங்க! திருமணமான நான்கு மாதங்களிலேயே  இரட்டை குழந்தைகளுக்கு நயனும் நானும் அம்மா அப்பா ஆகிட்டோம்னு விக்னேஷ் சிவன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் அறிவித்திருந்தார்‌. இந்த வருடம் தல தீபாவளி கொண்டாட இருக்கும் இந்த பிரபலங்கள் புதுமண தம்பதிகளா மட்டுமில்லாமல் புதிய பெற்றோராகவும் கொண்டாட உள்ளனர். "தல தீபாவளி வாழ்த்துக்கள் நயன்-விக்கி!"


 


பாலிவுட் ஸ்டார்ஸ் ஆலியா பட் - ரன்பீர் கபூர்




பிரபல பாலிவுட் ஜோடி ஆலியா பட் ரன்பீர் கபூர் தம்பதியினருக்கு கடந்த ஏப்ரல் 14ஆம் நாள் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. ஆலியா பட் ரன்பீர் கபூர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். மேலும் ஆலியா சிறுவயதில் இருந்தே ரன்பீரின் மிகப்பெரிய ரசிகை என்று பல நேர்காணலில் தெரிவித்துள்ளார்.  இவர்கள் இருவருக்கும் ஏப்ரல் மாதம் திருமணமாகி இருந்த நிலையில், இருவருமே தங்கள் வேலைகளில் பிஸியாக இருந்து வந்தனர். இந்நிலையில் ஜூலை மாதம் ஆலியா பட் அம்மாவாக போவதாக தனது சமூக வலைதள பக்கங்களில் அறிவித்தார்.இந்த தம்பதியினருக்கு வரும் நவம்பர் மாதம் குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஆலியா ரன்பீர் இருவரும் இணைந்து கரண் ஜோஹர் தயாரிப்பில் பிரம்மாஸ்திரா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் கடந்த மாதம் திரைக்கு வந்தது. அதன் ப்ரோமோஷன் ரிலீஸ் என இருவரும் ரொம்பவே பிஸியாக இருந்து வந்தனர். இந்த ஜோடிக்கும் இந்த தீபாவளி தல தீபாவளி தான்! தீபாவளி ஸ்பெஷலாக அவர்களுடன் குட்டி ஸ்டார் ஒன்றும் இணைந்திருக்கிறது என்பது மகிழ்ச்சியான விஷயம் தான்.


 


நிக்கி கல்ராணி - ஆதி




நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி இருவருக்கும் மார்ச் மாதம் நிச்சயம் நடந்து கடந்த மே 18 ஆம் நாள் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. இந்த ஜோடி காதலித்து திருமணம் செய்து கொண்ட லவ் பேர்ட்ஸ் தான்…இவர்கள் மரகத நாணயம் திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தார். திரைப்படத்தில் சேர முடியாமல் போன துக்கமோ என்னவோ, நிஜ வாழ்க்கையில் ஒன்று சேர்ந்து விட்டனர். இவர்கள் திருமணம் முடிந்து பேரிஸுக்கு ஹனிமூன் சென்றிருந்தனர். சமூக வலைதளங்களில் இவர்களின் திருமண போட்டோஸ், ஹனிமூன் போட்டோஸ் என இணையத்தில் வலம் வந்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்துக் கொண்டே இருக்கும். விரைவில் இந்த ஜோடியின் தல தீபாவளி புகைப்படங்களும் அவர்களது சமூக வலைதள பக்கங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.


 


தீபக் சஹர் - ஜெயா பரத்வாஜ் 




இந்திய கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான தீபக் சஹர் தனது நீண்ட நாள் காதலியான ஜெயா பரத்வாஜை கடந்த ஜூன் மாதம் கரம் பிடித்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் அணிக்கு எதிரான தொடர் நடந்து முடிந்தவுடன் தீபக் சஹர் ஜெயாவிற்கு மைதானத்தில் மோதிரம் கொடுத்து தனது காதலை வெளிப்படுத்தினார். ஜெயாவும் ஓகே சொல்ல, இவர்களது புகைப்படங்கள் இணையம் முழுவதும் ட்ரெண்டானது. இந்நிலையில் இந்த ஆண்டு இவர்களின் திருமணம் டெல்லியில் நடைபெற்றது. வருகின்ற தீபாவளி இந்த ஜோடிக்கும் தல தீபாவளி தான்!


ரவீந்திரன் - மகாலட்சுமி






திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்திரனுக்கும் சின்னத்திரை நடிகை மகாலட்சுமிக்கு சென்ற மாதம் திருமணம் நடைபெற்றது. சில நாட்களாக ரகசியமாக காதலித்து வந்த இந்த ஜோடி,  திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் இது இரண்டாம் கல்யாணம் தான். இருவருமே தங்கள் இணையரைப் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், புது வாழ்க்கையை தொடங்கி உள்ளனர். இவர்களது திருமண செய்தி இணையத்தில் தீயாய்ப் பரவி வந்தது.


இந்த வருடம் தல தீபாவளி கொண்டாட இருக்கும் புதுமண தம்பதிகள் அனைவருக்கும் "இனிய தல தீபாவளி நல்வாழ்த்துக்கள்!"