’தல’ அஜீத் ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த வலிமை பட டீசரின் குட்டி முன்னோட்டம் தற்போது வெளியாகியுள்ளது. வெளியான ஐந்து நிமிடங்களிலேயே பல லட்சம் வியூஸ்களைக் கடந்துள்ளது இந்த முன்னோட்டம். பைக்கில் பறந்து வரும் அஜீத் , ’கெட் ரெடி ஃபார் தி கேம்’ என வில்லன் சொல்ல ‘நான்  கேம் ஆரம்பிச்சாச்சு ரொம்ப நேரமாச்சு தம்பி’ என அதிரும் குரலில் அஜீத் வசனம் பேச அதிரவைப்பதாக உள்ளது முன்னோட்டம். படத்தில் அஜீத் கதாப்பாத்திரத்தின் பெயர் அர்ஜூன். 






தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். தமிழ்நாட்டில் இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவரது ரசிகர்கள் அவரை செல்லமாக "தல" என்று அழைக்கின்றனர். இவரது நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் கடந்த 2019ம் ஆண்டு கடைசியாக நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி இருந்தது. இதையடுத்து, அதே ஆண்டு எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் மீண்டும் நடித்து வந்தார். போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வந்த இந்த படத்திற்கு வலிமை என்று பெயரிடப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக வலிமை படத்தின் வெளியீடு எப்போது என்று காத்திருந்த ரசிகர்களுக்கு போனி கபூர் இன்று இன்ப அதிர்ச்சியாக வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளார்.





போனிகபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பில், 2022ம் ஆண்டு பொங்கலுக்கு வலிமை திரைப்படம் வெளியாகும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பதிவிட்டுள்ளார். போனி கபூரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அஜித்குமாரின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.வலிமை படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019ம் ஆண்டே தொடங்கப்பட்டாலும், கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக படத்தின் படப்பிடிப்பு கடுமையாக பாதிக்கப்பட்டது. இறுதிகட்ட படப்பிடிப்பு மட்டும் எஞ்சியிருந்த சூழலில், கடந்த மாதம் ரஷ்யாவில் இறுதிகட்ட சண்டைக்காட்சிகளும் படமாக்கப்பட்டது. இதையடுத்து, படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. முன்னதாக, படத்தின் மோஷன் போஸ்டரும், வலிமை படத்தின் பி.ஜி.எம். மற்றும் வலிமை படத்தின் பாடல் ஒன்றும் வெளியானது. வலிமை படத்தின் புகைப்படங்கள் ஏதும் வெளியாகததாலும், படத்தின் பிற அறிவிப்புகள் ஏதும் கிடைக்காததால் கடந்த இரண்டு ஆண்டுகளாக விரக்தியில் இருந்த அஜித் ரசிகர்களுக்கு வலிமை வெளியீட்டு தேதி அறிவிப்பு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.வலிமை படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது முதல் டுவிட்டரில் “தல பொங்கல்” என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் விஸ்வாசம் திரைப்படம் வெளியானது. அந்த ஆண்டிலே மாபெரும் வெற்றிப் படமாக விஸ்வாசம் அமைந்தது. தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, அஜித்குமாரின் வலிமை படமும் பொங்கலுக்கு வெளியாக இருப்பது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.