2012ம் ஆண்டு நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான ஒரு அதிரடி திரில்லர் திரைப்படம் "தாண்டவம்". தெய்வ திருமகள் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் ஏ.எல். விஜய் - விக்ரம் கூட்டணியில் வெளியான திரைப்படம். இப்படம் வெளியாகி இன்றோடு 10 ஆண்டுகளை கடந்து விட்டது. உடலை வருத்திக்கொண்டு நடிப்பதில் விக்ரமை மிஞ்ச ஆளே கிடையாது. அப்படி பட்ட தேர்ந்த கலைஞரின் படம் என்றால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருக்கும். ஆனால் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு சற்று ஏமாற்றத்தை தந்தது என்பது தான் உண்மை.  


 


 



 


எதிர்பார்ப்பு ஏமாற்றம் ஆனது :


 


தெய்வ திருமகள் படம் ஒரு வெற்றிப்படமாக அமைந்ததால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இப்படத்திற்கும் அதிகமாக இருந்தது. ஆனால் படம் அந்த அளவிற்கு எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றாலும் கலவையான  விமர்சனங்களை பெற்றது. வழக்கமான மசாலா கலந்த பழிவாங்கல் கதை தான். படத்தின் திரைக்கதை கொஞ்சம் சுமார் தான் என்றாலும் லண்டனில் படப்பிடிப்பு, அழகான மூன்று நடிகைகள் என வண்ணமயமாக படமாக்கப்பட்டதால் ரசிகர்களை கொஞ்சம் கவர்ந்தது. இப்படம் முழுக்க லண்டனின் அழகு கண்களை குளிர்ச்சியாக்கியது. 


 






 


வழக்கம் போல தீவிரவாதிகள் - போலீஸ் இடையில் நடக்கும் சமாச்சாரங்கள் தான். கதை இப்படி தான் நகர போகிறது என்பதை பார்வையாளர்கள் யூகித்து இருந்தாலும் அதை கொஞ்சம் சுவாரசியம் கலந்து சொல்லி படமாக்கி இருந்தார் இயக்குனர் விஜய். படத்தில் அனுஷ்கா ஷெட்டி, லட்சுமி ராய், எமி ஜாக்சன் என மூன்று கதாநாயகிகள் வந்து போனாலும் அதிகமான பாராட்டை பெற்றது அனுஷ்காவின் நடிப்பு தான். ஆபாசம் இல்லாத ஒரு மென்மையான மருத்துவராக நடித்த அனுஷ்காவின் நடிப்பு ஆஹா ஓஹோ. மேலும் இப்படத்தில் நடிகர் நாசர், சந்தானம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கண் தெரியாதவராக நடித்த விக்ரமின் நடிப்பு அசாதாரணமாக இருந்தது. 


 






 


படத்திற்கு ஹைலைட்டாக அமைந்தது நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு. ஜி.வி. பிரகாஷ் இசையில் பாடல்கள் அந்த அளவிற்கு மனதில் நிற்கவில்லை என்றாலும் ஒரு பாதி கதவு பாடல்... அருமை மற்றபடி பாடல்கள் ஒகே. வழக்கமான தீவிரவாதிகள் கதை போல இல்லாமல் வேறு ஏதாவது புதுமையாக கையாண்டு இருந்தால் அல்லது திரைக்கதை கொஞ்சம் வலுவாக இருந்தால் படம் ஓரளவிற்கு வெற்றி பெற்று இருக்கும்.