தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அல்லு அர்ஜூன் நாகர்ஜூனாவுக்கு சொந்தமான மண்டபத்தில் ரசிகர்களை சந்திக்க இருப்பதாக திட்டமிட்டிருந்தார். இதனால் அல்லு அர்ஜூனை காண அங்கு ஏராளனமான ரசிகர்கள் குவிந்தனர். இதனால் அங்கு சலசலப்பு உண்டானதாகவும், ரசிகர்கள் பலர் காயமடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனைக் கேள்விப்பட்ட நடிகர் அல்லு அர்ஜூன், பாதி வழியிலேயே நிகழ்ச்சியை கேன்சல் செய்து விட்டு, வீடு திரும்பி விட்டதாக கூறப்பட்டது.


இது குறித்து போலீசார் கூறும் போது, 200 பேர் மட்டுமே நுழையக்கூடிய மண்டபத்தில், 2000 பேர் வரை அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், ரசிகர்கள் சிலர் காயமடைந்தனர். அதிகமான நபர்களை நுழைய அனுமதித்ததாலும், கொரோனா தடுப்பு விதிகளை மீறியதற்காகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றனர். இந்த நிலையில், நடிகர் அல்லு அர்ஜூன் இந்த நிகழ்வு தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.





அதில், “ “ ரசிகர்களை சந்திப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் ரசிகர்கள் பலர் காயமடைந்ததாக கேள்விப்பட்டேன். இனிமேல் இது போன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் கவனமாக பார்த்துக்கொள்கிறேன். என் மீதான உங்களின் அன்பும் அர்ப்பணிப்பும்தான் எனது பெரிய சொத்து. அதை நான் தவறாக உபயோகப்படுத்த மாட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 






 


தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜூன். இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா. தெலுங்கின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சுகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தின் போஸ்டர்கள், பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பபை பெற்றுள்ளது.




பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் வரும் டிசம்பர் 17-ந் தேதி வெளியாக உள்ளது. அல்லு அர்ஜூன் நாயகனாக நடிக்கும் புஷ்பா திரைப்படத்தில் மலையாள நடிகர் பஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் நடிக்கின்றனர்.  முதலில் புஷ்பா திரைப்படம் கிறிஸ்துமஸ் விருந்தாக டிசம்பர் 25-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதே தேதியில் ரன்வீர்சிங் நடிப்பில் உருவாகியுள்ள 83 திரைப்படமும் வெளியாக உள்ளதால் புஷ்பா படத்தை டிசம்பர் 17-ந் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவித்தது.




செம்மரக்கட்டையை கடத்தும் லாரி ஓட்டுநராக புஷ்பராஜ் என்ற கதாபாத்திரத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கிறார். பஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா ஆகியோருடன் ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், தனஞ்செய், சுனில், ஹரிஷ் உத்தமன், கிஷோர், அனசுயா பரத்வாஜ், ஸ்ரீதேஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.


சமந்தா குத்துபாடல் ஒன்றிற்கு நடனம் ஆடியிருக்கிறார். இந்தப் பாடல் ஆண்களை கொச்சைப்படுத்தும் வகையில் இருப்பதாக ஆந்திராவில் உள்ள ஆண்கள் அமைப்பு ஒன்று வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.