தற்போதைய சினிமாவின் பொருளாதார சூழலில், நடிகர்கள் விஜய், மகேஷ் பாபு ஆகிய இருவரும் உச்சகட்ட நிலையில் நிற்பவர்கள். இருவருமே பெரிய ரசிகர்கள் பட்டாளத்தைத் தங்களிடம் கொண்டிருப்பவர்கள்.. இந்த இரண்டு மெகா நடிகர்களும் ஒரே படத்தில் இணைந்து நடித்தால் எப்படி இருக்கும்? இது நீண்ட காலத்திற்குப் பின் நிகழும் கனவைப் போல தோன்றினாலும், இருவரும் இணைந்து நடிப்பது உண்மையாகவே நிகழ்வதற்குப் பல்வேறு வாய்ப்புகள் தோன்றியுள்ளன. 


சமீபத்தில் கிடைத்த தகவல்களின்படி, நடிகர் விஜய் நடித்து வரும் `தளபதி 66’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் மகேஷ் பாபு நடிக்கிறார் எனவும், படத்தின் கதாபாத்திரங்களுக்கான அறிமுகத்தை அவர் வழங்குவார் எனவும் கூறப்பட்டுள்ளது. எனினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. 


`பீஸ்ட்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, நடிகர் விஜய் தற்போது தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்புகளில் மும்முரமாக இருக்கிறார். இதில் ரஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். இதே இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி கடந்த 2019ஆம் ஆண்டு மகேஷ் பாபு நடிப்பில் ஆக்‌ஷன் திரைப்படமான `மகரிஷி’ திரைப்படத்தை உருவாக்கியவர். இதில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருந்தார். 



`தளபதி 66’ திரைப்படத்திற்கான படப்பிடிப்புப் பணிகள் மிக வேகமாக சென்னையில் நடந்து வருவதோடு, இதற்காக பிரம்மாண்ட செட் ஒன்று போடப்பட்டுள்ளது. மேலும், படக்குழுவினர் அனைவரும் அடுத்த கட்ட படப்பிடிப்புகளுக்காக ஹைதராபாத் செல்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிடப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது. 


சமீபத்தில் இணையத்தில் வைரலான படம் ஒன்றில், நடிகர் விஜய் இந்தப் படத்திற்காக புதிய கெட்டப்பில் இருப்பதும், நடிகை ரஷ்மிகா மந்தனாவுடனான படப்பிடிப்பில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்துள்ளது. 


இவர்கள் மட்டுமின்றி, இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், பிரபு, ஸ்ரீநாத், ஷாம், யோகி பாபு, குஷ்பூ, சங்கீதா, சம்யுக்தா சண்முகநாதன் முதலான பலரும் முன்னணி வேடங்களில் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 



இவை ஒருபக்கம் இருக்க, சமீபத்தில் வெளியான தன்னுடைய `சர்காரு வாரி பாட்டா’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, அதனைக் கொண்டாடும் விதமாக தனது குடும்பத்தினருடன் ஜெர்மனியில் விடுமுறையைக் கழித்து வருகிறார் நடிகர் மகேஷ் பாபு. 


அவரது அடுத்த திரைப்படத்தின் இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் மகேஷ் பாபுவை ஜெர்மனியில் சந்தித்து மீண்டும் கதை குறித்து உரையாடுவதாகக் கூறப்பட்டுள்ளது. SSMB28 எனத் தற்காலிகமாக தலைப்பு சூட்டப்பட்டுள்ள இந்தப் படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண