பிரபல இசையமைப்பாளர் ராஜ் காலமான தகவல் தென்னிந்திய சினிமாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது,
90 காலக்கட்டத்தில் தென்னிந்திய இசையமைப்பாளர்களில் பிரபலமான ஒருவராக திகழ்ந்த இரட்டை இசையமைப்பாளர்கள் ‘ராஜ்-கோடி’ . தோட்டகுரு சோமராஜு மற்றும் சலூரி கோட்டேஷ்வர் ராவ் என்பது இவர்களின் உண்மையான பெயராகும். இவர்கள் இருவரும் சுமார் 180 மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளனர். 90களில் பல படங்களுக்கு சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ள ராஜ் - கோடி இசையில் வெளியான 3000 பாடல்களில், சுமார் 2,500 பாடல்களை பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் கே.எஸ்.சித்ரா ஆகியோர் பாடியுள்ளனர்.
இவர்களிடம் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 8 ஆண்டுகள் கீ-போர்டு பிளேயராக பணியாற்றியுள்ளார். இப்படி புகழ்பெற்ற இந்த கூட்டணி 1982 ஆம் ஆண்டு முதல் 1995 ஆம் ஆண்டு வரை இசை உலகில் கொடிகட்டி பறந்தனர். இவர்களில் 68 வயதான ராஜ், ஹைதராபாத் குகட் பாலியில் உள்ள ஃபோரம் மால் அருகே வசித்து வருகிறார்.
இவருக்கு தீப்தி, ஸ்வேதா, திவ்யா என்ற மூன்று மகள்கள் உள்ளனர். இவர்களில் திவ்யா இணை இயக்குநராக பணியாற்றி வருகிறார். மற்ற இருவரும் மலேசியாவில் வசித்து வருகின்றனர். இப்படியான நிலையில் ராஜ் நேற்று குளியலறையில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் மயக்கமான அவரை மீட்டு குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ராஜை பரிசோதித்த மருத்துவர்கள், விழுந்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைக் கேட்டு குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
ராஜின் இறுதி சடங்குகள் ஹைதராபாத்தில் உள்ள மகாபிரஸ்தானத்தில் இன்று நடைபெறுகிறது. அவரது இரு மகள்களும் மலேசியாவில் இருந்து இந்தியா விரைந்து வந்துள்ளனர். ராஜ் மறைவு செய்தி கேட்டவுன் தென்னிந்திய திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் அவரது குடும்பத்தினருக்கு தங்கள் இரங்கலைத் தெரிவித்தனர். சமீபகாலமாக திரையுலகில் பிரபலங்களின் மரணங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
நடப்பாண்டில் மட்டும் தமிழ் சினிமாவில் நடிகர்கள் மனோபாலா, இயக்குநர் டிபி கஜேந்திரன், மயில்சாமி, நடிகை விஜயலட்சுமி உள்ளிட்ட பிரபலங்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.