மாவீரா, நான் ஈ போன்ற திரைப்படங்களை இயக்கிய தெலுங்கு இயக்குனர் எஸ்.எஸ் ராஜமௌலி பிரபலத்தின் உச்சிக்கு அழைத்து சென்றது அவரின் பாகுபலி திரைப்படம் மூலம் தான். அதனை தொடர்ந்து  பாகுபலி 2 பிரமாண்டமான திரைப்படத்திற்கு பிறகு எஸ்.எஸ். ராஜமௌலியின் புகழ் உச்சிக்கு சென்றது. அந்த வகையில் நடிகர் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் சரித்திர கதையம்சம் கொண்ட படமாக கடந்த ஆண்டு வெளியான பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். ரூ. 1100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. தற்போது ஆர்.ஆர்.ஆர் புகழ் சர்வதேச அளவில் கொடி கட்டி பறந்து வருகிறது. 


 



இறுதி பட்டியலில் நாட்டு நாட்டு :


ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு...' பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவின் கீழ் கோல்டன் குளோப் விருதை கைப்பற்றி அசத்தியது. மேலும் திரையுலக கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ஆஸ்கார் விருதுக்கான இறுதி கட்ட நாமினேஷன் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது 'நாட்டு நாட்டு...' பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. 


 






 


ஜேம்ஸ் கேமரூன் புகழாரம் :


ஹாலிவுட் முன்னணி இயக்குனரான ஜேம்ஸ் கேமரூன் - எஸ்.எஸ். ராஜமௌலி சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் ஜேம்ஸ் கேமரூன் ராஜமௌலியிடம் பேசும் மூன்று நிமிட வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டது. அது மட்டும் இல்லாமல் ஜேம்ஸ் கேமரூன், ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தை இரண்டு முறை ரசித்து பார்த்ததாகவும் எதிர்காலத்தில் ஹாலிவுட்டில் படமெடுக்கும் ஐடியா இருந்தால் என்னிடம் சொல்லுங்கள் என கூறியதை விருதுக்கும் மேல் உயர்வாக கருதுவதாக எஸ்.எஸ்.ராஜமௌலி தெரிவித்து இருந்தார். 


 






கொலை மிரட்டல் விடுத்த பிரபல இயக்குனர் :


இப்படி உலகளவில் மிகவும் பிரபலமாக கொண்டாடப்பட்டு வரும் இயக்குனர் ராஜமௌலிக்கு சர்ச்சையின் மன்னனாக விலகும் தெலுங்கு திரைப்பட இயக்குனர் ராம்கோபால் வர்மா ட்விட்டர் மூலம் கொலை மிரட்டலை பதிவிட்டுள்ளார். "ராஜமௌலி சார் உங்களின் பாதுகாப்பை அதிகரித்து கொள்ளுங்கள். உங்கள் மீது பொறாமையில் இருக்கும் இயக்குனர்கள் உங்களை கொலை செய்ய குழு ஒன்றை அமைத்துள்ளனர். அந்த குழுவின் நானும் ஒருவனாக இருக்கிறேன். தற்போது குடிபோதையில் இருப்பதால் உண்மையை உளறிவிட்டேன்"என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இயக்குனர் ராம்கோபால் வர்மா இது போன்ற ஒரு கொலை மிரட்டலை சோசியல் மீடியாவில் பகிர்ந்ததற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.