பிக் பாஸ் எனப்படும் ரியாலிட்டி ஷோ பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு நிகழ்ச்சியாகும். ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு திரை பிரபலம் தொகுத்து வழங்கி வருகிறார்கள். இந்தியில் சல்மான் கான், மராத்தியில் மகேஷ் மஞ்ச்ரேக்கர், தமிழில் கமல்ஹாசன், கன்னடத்தில் கிச்சா சுதீப் மற்றும் தெலுங்கில் நாகார்ஜுனா ஆகியோர் பிக் பாஸ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றனர்.
தெலுங்கு பிக் பாஸ் மீது மனு தாக்கல் :
அந்த வகையில் பிரபல தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவான தெலுங்கு 'பிக் பாஸ் சீசன் 6' நிகழ்ச்சி ஆபாசத்தை ஊக்குவிக்கும் ஒரு நிகழ்ச்சி என்ற சர்ச்சையில் சிக்கி ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு ஒன்று சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கேதிரெட்டி ஜெகதீஸ்வர் ரெட்டி இந்த நிகழ்ச்சி ஆபாசமாக இருப்பதாக கூறி மனுதாக்கல் செய்துள்ளார். தகுந்த ஒளிபரப்பு வழிகாட்டுதல்கள் நிறைவேற்ற படாவிட்டால் இந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட வேண்டும் என மனு தாக்கலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடிகர் நாகார்ஜூனாவுக்கு நோட்டீஸ் :
இந்த வழக்கை விசாரித்த ஆந்திர உயர்நீதிமன்றம், நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி குறித்து அவர் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும் என அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் மட்டுமின்றி மத்திய, மாநில அரசுக்கும் கூட பதில் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் அடுத்த கட்ட விசாரணை 14 நாட்களுக்கு ஒத்திவைக்க உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நாகார்ஜுனா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகல் :
சமீபத்தில் நடிகர் நாகார்ஜுனா நடிப்பில் வெளியான கோஸ்ட், பங்கார்ராஜு உள்ளிட்ட படங்களை எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் தோல்வியை சந்தித்தது. அதே நிலையில் தான் தெலுங்கு பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்கும் மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லாமல் இருக்கிறது. அடுத்தடுத்து சறுக்கல்களும் நஷ்டத்தையும் எதிர்கொள்ளும் நடிகர் நாகர்ஜூனாவிற்கு இந்த உயர்நீதிமன்ற நோட்டீஸ் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நடிகர் நாகார்ஜுனா இந்த பிக் பாஸ் சீசன் முடிவடைந்த உடன் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி விடுவார் என கூறப்படுகிறது. இதுவரையில் 50 நாட்களை கடந்து விட்ட தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் முடிவு பெறும்.