கர்நாடகாவில் பண்ணை வீட்டில் நடந்த மதுவிருந்தில் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியாகி உள்ளது. இதன்மூலம் பிரபலங்கள் சிலர் கைதாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 


திரையுலகம் மற்றும் சமூக பிரபலங்கள் இடையே பார்ட்டி கலாச்சாரம் என்பது சகஜமான ஒன்று தான் என்றாலும், அதில் போதைப்பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக சமீபகாலமாக குற்றச்சாட்டுகள் அதிகளவில் வெளியாகி வருகிறது. இதனிடையே கர்நாடகா மாநிலம் பெங்களூவின் புறநகர் பகுதியில் உள்ள பண்ணை வீட்டு ஒன்றில் கடந்த மே 19 ஆம் தேதி மதுவிருந்து நடந்தது. 


இந்த பண்ணை வீட்டில் போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது மது விருந்தில் போதைப்பொருட்களும் பயன்படுத்தப்பட்டது உறுதியானது. இந்த நிகழ்வில் தெலுங்கு திரையுலக பிரபலங்கள், ஐடி நிறுவன ஊழியர்கள் என 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விருந்தை ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபரான வாசு பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்தது தெரிய வந்தது. 


தெலுங்கு நடிகை ஹேமா இந்த விருந்தில் பங்கேற்றதாக கூறப்பட்ட நிலையில், சம்பவம் நடந்த நாளில் தான் பெங்களூருவில் இல்லை என வீடியோ வெளியிட்டு இருந்தார். அதேபோல் மற்றொரு நடிகையான ஆஷா ராயும் தான் பண்ணை வீட்டில் நடந்த விருந்தில் பங்கேற்றேன். ஆனால் போதைப்பொருள் பயன்படுத்தியது பற்றியது எதுவும் தெரியாது என வீடியோ வெளியிட்டார். 


இந்நிலையில் மது விருந்தில் ஹேமா இருந்ததை பெங்களூரு போலீசார் உறுதி செய்தனர். இந்த விருந்தில் பிடிபட்ட 103 பேரின் ரத்த மாதிரிகளையும் சேகரித்து சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அதன் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் அதில் 86 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானது. இதில் நடிகைகள் ஹேமா மற்றும் ஆஷா ராய் போதைப்பொருள் பயன்படுத்தியதும் கண்டறியப்பட்டது. 


86 பேரில் 59 ஆண்கள், 27 பெண்கள் என அனைவரையும் விசாரணைக்கு ஆஜராகும்படி பெங்களூரு குற்றப்பிரிவு போலீசார் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளனர். இதன் பின்னர் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. 




மேலும் படிக்க: PT Sir Review: ஹிப் ஹாப் ஆதி ஸ்கோர் செய்தாரா? வெறுப்பேற்றினாரா?.. "PT சார்" படத்தின் முழு விமர்சனம்!