பெண்கள் மற்றும் கதாநாயகிகள் அடக்கமாக உடை அணியுமாறு பிரபல தெலுங்கு நடிகர் சிவாஜி பேசியிருப்பது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
கம்பேக் கொடுத்த சிவாஜி
1990களின் காலக்கட்டத்தில் தெலுங்கில் பல படங்களில் நடித்து அனைவருக்கும் பரீட்சையமானவராக திகழ்ந்தவர் நடிகர் சிவாஜி. 2016ம் ஆண்டுக்குப் பின் நடிக்காமல் இருந்த அவர், நடப்பாண்டு வெளியான நானி தயாரித்த கோர்ட் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்குள் வந்தார். அந்த படத்தில் சிவாஜியின் வில்லத்தனமான நடிப்பு பேசுபொருளாக மாறியது. இப்போது அவர் நடிப்பில் தண்டோரா படம் வெளியாகவுள்ளது. இதன் முன்னோட்ட நிகழ்ச்சி நேற்று (டிசம்பர் 23) நடைபெற்றது.
அந்நிகழ்ச்சியில் பேசிய சிவாஜி,”எல்லா கதாநாயகிகளும் உடல் பாகங்களை வெளிப்படுத்தும் உடைகளை அணிய வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து சேலை அல்லது உடலை முழுவதுமாக மறைக்கும் உடைகளை அணியுங்கள். அழகு என்பது முழுமையான உடையிலோ அல்லது சேலையிலோ உள்ளது. உடல் பாகங்களை வெளிக்காட்டுவதில் அல்ல" என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “மக்கள் எதையும் வெளிப்படையாகப் பேசாமல் இருக்கலாம், ஏனென்றால் அது உங்கள் சுதந்திரம் என்று அவர்கள் உணர்கிறார்கள், ஆனால் உள்ளுக்குள் அவர்கள் அதை விரும்பாமல் இருக்கலாம். ஒரு பெண் இயற்கையைப் போன்றவள். இயற்கை அழகாக இருக்கும்போது, நாம் அதை மதிக்கிறோம். ஒரு பெண் என் தாயைப் போன்றவள், நான் அவளை என் இதயத்திற்கு நெருக்கமாக வைத்திருக்கிறேன்” என கூறினார்.
இதனையடுத்து புகழ்பெற்ற நடிகைகளான சாவித்ரி மற்றும் சௌந்தர்யா மற்றும் வளர்ந்து வரும் நடிகையாக உள்ள ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நேர்த்தியான உடை அணிவதை உதாரணமாகக் குறிப்பிட்ட சிவாஜி, அவர்கள் தங்கள் உடையின் மூலம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். அதனால்தான் நான் அவர்கள் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளனர் என சொன்னார்.
அதுமட்டுமல்லாமல் சுதந்திரம் விலைமதிப்பற்றது. எனவே அதை இழக்காதீர்கள். உங்கள் நடத்தையைப் பொறுத்து மக்கள் உங்களை மதிப்பார்கள். கவர்ச்சிக்கு வரம்புகள் இருக்க வேண்டும். அது ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் என்னுடைய பேச்சை யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அப்படியே எடுத்தாலும் அதை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது எனக்கு நன்றாக தெரியும். அது எனக்கு பிரச்னை இல்லை” என நடிகர் சிவாஜி கூறியுள்ளார்.
இதனையடுத்து சிவாஜிக்கு பல பெண்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆடை சுதந்திரம் பற்றி கருத்து தெரிவிக்கவும் ஒரு அளவு உள்ளது. இதைப்பற்றி பேசும் சிவாஜி மட்டும் என கலாச்சார ஆடையா அணிந்திருந்தார். ஹூடி மற்றும் ஜீன்ஸ் அணிந்துள்ளார். நம் கலாச்சாரப்படி வேட்டி அணிந்திருக்கலாம். நெற்றியில் பொட்டு வைத்திருக்க வேண்டும். திருமணமானவர் என்பதற்கு அடையாளமாக காலில் மெட்டி, கங்கணம் எனப்படும் கையில் கட்டப்படும் மஞ்சள் சரடு அணிந்திருக்கலாமே என சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளனர்.