சர்வானந்த்:
தெலுங்கு திரையுலகில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் சர்வானந்த். தமிழியில் எங்கேயும் எப்போதும் படத்தின் கவுதம் எனும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதைதொடர்ந்து, ஜேகே எனும் நண்பனின் கதை எனும் படத்தில் நடித்தார். பின்பு தெலுங்கு திரைப்படங்களில் மட்டும் அதிக கவனம் செலுத்தி வந்த சர்வானந்த் நடிப்பில், அண்மையில் கணம் எனும் திரைப்படம் தமிழில் வெளியானது. டைம் டிராவல் தொடர்பான அந்த படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
சர்வானந்த் நிச்சயதார்த்தம்:
இதனிடையே, 38 வயதான சர்வானந்த் ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும், விரைவில் அவருக்கு திருமணம் நடைபெற உள்ளதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனாலும், இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாமலேயே இருந்தது. இந்நிலையில் தான், தனது நீண்ட நாள் காதலியான ரக்ஷிதா ரெட்டியுடன் நிச்சயம் ஆன புகைப்படங்களை சர்வானந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ”எனது சிறப்பான நபரை காணுங்கள். ரக்ஷிதா ரெட்டி. இந்த அழகான பெண்ணுடன் சேர்ந்து வாழ்வின் முக்கியமான அடியை எடுத்து வைக்கிறேன். உங்களின் அனைத்து ஆசிகளும் வேண்டும்” என சர்வானந்த் குறிப்பிட்டுள்ளார்.
யார் இந்த ரக்ஷிதா ரெட்டி:
சர்வானந்தின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில், ரசிகர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் அந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மறைந்த தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் பொஜ்ஜாலா கோபால் கிருஷ்ணா ரெட்டியின் பேத்தியும், ஐதராபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மதுசூதன் ரெட்டியின் மகளுமான, ரக்ஷிதா ரெட்டி உடன் தான் சர்வானந்திற்கு நிச்சயம் ஆகியுள்ளது.ரக்ஷிதா ரெட்டி அமெரிக்காவில் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றி வருகிறார்.
எப்போது திருமணம்
இந்த நிச்சய விழாவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். சிரஞ்சீவியின் மகனும், தெலுங்கு முன்னணி நடிகருமான ராம் சரண் தனது மனைவி உபாசனா மற்றும் பலர் கலந்து கொண்டனர். நடப்பாண்டு இறுதியில் சர்வானந்த் மற்றும் ரக்ஷிதா ரெட்டியின் திருமணம் நடைபெற உள்ளதாகவும், விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் ஒகே ஒக ஜீவிதம் எனும் திரைப்படத்தில் ராஷி கண்ணா உடன் சேர்ந்து சர்வானந்த் நடித்து வருகிறார்.