வெள்ளித்திரை நட்சத்திரங்களை காட்டிலும் சின்னத்திரை நட்சத்திரங்கள் பார்வையாளர்களின் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்த கூடியவர்கள். அதனால் அவர்களுக்கும் ரசிகர் பட்டாளம் அதிகரித்து  கொண்டே போகிறது. அப்படி தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை சேர்த்தவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'நினைத்தாலே இனிக்கும்' சீரியலின் கதாநாயகி சுவாதி சர்மா. தமிழ் சீரியலில் அறிமுகமாவதற்கு முன்னரே கன்னட சீரியலில் பிரபலமான நடிகையாக இருந்தவர். கண்டேயா கதே, துரோணா, ஃபார்ச்சூனர் போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார். அதன் மூலம் தான் இவருக்கு 'நினைத்தாலே இனிக்கும்' சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த சீரியலில் பொம்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 


 



சமீபத்தில் சுவாதி சர்மா உடன் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் பேசுகையில் நடிப்பு துறையில் நுழைந்த ஆரம்ப காலகட்டங்களில் அட்ஜஸ்ட்மென்ட் பற்றின அவரின் அனுபவத்தை பகிர்ந்து இருந்தார். தனது காலேஜ் படிப்பை முடித்த பிறகு மாடலிங் துறையில் ஆர்வம் இருந்ததால் அதன் மூலம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வந்த சமயத்தில் வாய்ப்புக்காக ஒருவரை சந்திக்க சென்றுள்ளார். சுவாதியுடன் அவரது அம்மாவும் உடன் சென்றுள்ளார். அவர் சந்திக்க சென்ற நபர் சுவாதியின் அம்மா முன்னரே அட்ஜஸ்ட்மென்ட் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். கோபமான சுவாதியின் அம்மா  அந்த நபரை கடுமையாக திட்டியுள்ளார். 


வெளியில் வந்த பிறகு சுவாதியிடம் இது போல நடக்கும் என்பதற்காக  தான் நான் முதலில் இருந்தே நடிப்பு வேண்டாம் என்றேன். நான் இருக்கும் போதே இப்படி கேட்டவர்கள் நாளை நீ தனியாக நடிக்க செல்லும் போது என்னென்ன கேட்பார்கள். நடிப்பு தேவையில்லை என முடிவெடுத்துள்ளார். பின்னர் சுவாதி அம்மாவை சமாதானப்படுத்தி நடிக்க சம்மதம் வாங்கியுள்ளார். அப்படி நடிக்க துவங்கிய சுவாதி 'நினைத்தாலே இனிக்கும்' வாய்ப்பு கிடைத்த போது சென்னை வரவே மிகவும் பயந்ததாக அந்த நேர்காணலில் தெரிவித்தது திரையுலகத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


அட்ஜஸ்ட்மென்ட் என்பது பெண்கள் மட்டும் சந்திக்கும் பிரச்சனை கிடையாது. பல ஆண்களும் இதை சந்திக்கிறார்கள். ஆனால் அவர்கள் வெளிப்படையாக இது குறித்து பேசுவதில்லை. சமீப காலமாக வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகைகள் தங்களிடம் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து கேட்பவர்களின் முகத்திரையை கிழிக்க துவங்கியுள்ளனர். நடிகைகள் அமைதியாக பயந்து இருந்த காலம் எல்லாம் மலையேறிப் போய்விட்டது. பெண்கள் அடங்கி போவதால் தான் வாய்ப்பு தருகிறேன் என்ற பெயரில் இதுபோன்ற கறுப்பாடுகள் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து கூச்சமின்றி தைரியமாக கேட்கிறார்கள் என்பதால் பெண்கள் மிகவும் வெளிப்படையாக இது குறித்து பொது வெளியில் பகிரங்கமாக பேச துவங்கிவிட்டனர்.


அந்த வகையில் சமீபத்தில் கூட நடிகை வரலக்ஷ்மி, சின்னத்திரை நடிகை லாவண்யா மற்றும் பலர் வெளிப்படையாக தங்களுக்கு நேர்ந்த அட்ஜஸ்ட்மென்ட் குறித்த அனுபவத்தை பகிர்ந்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.