விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை (Siragadikka Aasai) தொடரில் இந்த வாரம் என்ன நடக்கப்போகிறது என்பதைப் பற்றி காணலாம். 


சிறகடிக்க ஆசை சீரியல் 


சின்னத்திரையில் ஒவ்வொரு சேனல்களும் விதவிதமாக சீரியல்களை ஒளிபரப்பினாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு  என்று  தனி ரசிகர்கள் உள்ளது. இதில் ஒவ்வொரு மாதமும் மிகப்பெரிய அளவில் சீரியல்கள் ரசிகர்களிடையே கொண்டாடப்படும். அந்த வகையில் விஜய் டிவியில் மட்டுமல்லாது டிஆர்பி ரேட்டிங்கிலும் “சிறகடிக்க ஆசை” சீரியல் கலக்கி வருகிறது. 


எஸ்.குமரன் இயக்கி வரும் இந்த சீரியலுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர் என்பதே உண்மை. இந்த சீரியலில் வெற்றி வசந்த், கோமதிப் பிரியா, ஆர்.சுந்தரராஜன், பாக்யலட்சுமி, அனிலா ஸ்ரீகுமார், ஸ்ரீதேவா, சல்மா அருண் கல்யாணி, ப்ரீத்தா ரெட்டி என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். 


கடந்த வாரம் நடந்தது என்ன?


கடந்த வாரம் நடந்த எபிசோடுகளில் முத்துவை குடிகாரனாக சித்தரித்து  சிட்டி வீடியோவைப் பரப்ப அது ஊரெல்லாம் வைரலாகிறது. அந்த வீடியோவை சீதா மீனாவிடம் காட்டுகிறார். இதனைக் கண்டு மீனா அதிர்ச்சியடைகிறார். இதனிடையே ஸ்ருதியின் அப்பா தனக்கு தெரிந்த போலீஸ் அதிகாரிக்கு வீடியோவை அனுப்பி முத்துவின் வண்டியைப் பறிக்கும் வகையிலான செயலில் ஈடுபடுகிறார்.


போலீசாரிடம் எவ்வளவு கெஞ்சியும் அவர் கேட்கவே இல்லை. முத்து வீட்டுக்கு திரும்பி வரும்போது அவரிடம் வீடியோவைக் காட்டி அனைவரும் கேள்வியெழுப்புகின்றனர். முத்து கோபத்தில் மனோஜை அடிக்க கை ஓங்குகிறார். இதனால் அண்ணாமலை முத்துவை அடிக்கும் காட்சிகள் இடம்பெற்றது. 



இந்த வாரம் நடப்பது என்ன?


இந்த வார எபிசோடில் முத்து மீனாவிடம் சத்தியமாக நான் குடிக்கவில்லை எனக் கூறி, தன்னை நம்புமாறு அழுது கெஞ்சுகிறார். ஆனால் மீனா முத்துவை நம்பாமல் இருக்கிறார். இதனைக் கண்டு ரோகிணி சந்தோசப்படுகிறார். இதற்கிடையில் அண்ணாமலை முத்துவிடம் “குடியை விட்டுத் தொலைன்னு ஆயிரம் தடவை சொல்லிட்டேன்” என கத்துகிறார். தான் குடிக்கவே இல்லை என முத்து தெரிவிக்க, யாரும் நம்பவே இல்லை. இதனிடையே விஜயா முத்துவிடம் உன்னை சொல்லி குற்றமில்லை. “எல்லாம் உனக்கு வாய்ச்சவ அப்படி” என மீனா மீது குறை சொல்கிறார். “நீங்களா கிளம்பி வீட்டை விட்டு வெளியே போய்டுங்க” என எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுகிறார். 


இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்துக்கு சென்று தன் வண்டியை கொடுக்குமாறு முத்து கெஞ்சுகிறார். ஆனால் லைசன்ஸ் கேன்சல் பண்ண முடிவெடுத்திருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர். பின்னர் அவரை டீ வாங்கிட்டு வருமாறு அலைகழிக்கும் காட்சிகள் இடம்பெறுகிறது.