விஜய் தொலைக்காட்சியின் 'ஈரமான ரோஜாவே 2’ தொடரில் முதலிரவுக் காட்சிகள் இடம்பெற்றிருந்த நிலையில் ,தொலைக்காட்சி சீரியல் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இந்தக் காட்சிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


ஈரமான ரோஜாவே 2


விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொடர்களில் ஒன்று ‘ஈரமான ரோஜாவே’. இந்தத் தொடரின் முதல் சீசன் கடந்த 2018ஆம் ஆண்டு ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தது. இந்நிலையில், தற்போது இதன் இரண்டாம் சீசன் சென்ற ஆண்டு தொடங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.


தற்போது 350 எபிசோடுகளை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்தத் தொடருக்கு பெரும் ரசிகர் கூட்டமே உள்ளது.  விஜய் தொலைக்காட்சியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் முன்னதாக கவனமீர்த்த கேப்ரியலா, திரவியம் ராஜகுமாரன், சித்தார்த் குமரன், ஸ்வாதி, சாந்தின் பிரகாஷ், தினேஷ் கோபாலசாமி ஆகியோர் இத்தொடரில் நடித்து வருகின்றனர்.


சீரியலில் முதலிரவுக்காட்சி!


இந்நிலையில், இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஜேகே மற்றும் ரம்யா கதாபாத்திரங்களின் முதலிரவுக் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்தக் காட்சியில் திரைப்படங்களுக்கு இணையாக ரொமான்ஸ் காட்சிகள் சற்று தூக்கலாகவும், பாடலின் பின்னணியில் இந்தக் கதாபாத்திரங்களின் முத்தக்காட்சியும், படுக்கையறைக் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில்,  தொலைக்காட்சித் தொடர் ரசிகர்கள் இந்தக் காட்சிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இணையத்தில் திட்டித் தீர்த்து வருகின்றனர்.


இந்தத் தொடரின் ப்ரொமோவிலும் முன்னதாக இந்தக் காட்சி இடம்பெற்றிருந்த நிலையில், வீட்டில் குழந்தைகளோடு அமர்ந்து இந்தக் காட்சிகளை தங்களால் பார்க்க முடியவில்லை என்றும், டிஆர்பிக்காக சீரியல் உலகத்திலும் இப்படியெல்லாம் காட்சிகள் வைக்கத் தொடங்கி விட்டார்கள் என்றும் ரசிகர்கள் கடும் எதிர்ப்புகளைப் பதிவிட்டு வருகின்றனர்.


இந்தி சீரியல்களுடன் போட்டியா?


இந்தி சீரியல்களில் வழக்கமாக ரொமான்ஸ் சற்று தூக்கலாக இருக்கும் நிலையில், டப்பிங் இந்தி சீரியல்கள் தமிழில் கடந்த சில ஆண்டுகளாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.


இந்நிலையில் அவற்றுடன் போட்டிபோடும் வகையில் பல நேரடி தமிழ் தொலைக்காட்சி சீரியல்களிலும் சமீபகாலமாக சற்று தூக்கலான ரொமான்ஸ் காட்சிகள் வைக்கப்பட்டு வருகின்றன. இச்சூழலில் ரசிகர்களை அதிகரிக்கும் நோக்கில் இப்படி ரொமான்ஸ் காட்சிகள் வைத்த ஈரமான ரோஜாவே சீரியல் குழு, மாறாக சீரியல் ரசிகர்களின் கோபத்துக்கும் எதிர்ப்புக்கும் ஆளாகி உள்ளது.


இந்தக் காட்சியின் யூடியூப் வீடியோவிலும் சமூக வலைதளங்களிலும் தொலைக்காட்சி சீரியல் ரசிகர்கள் கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர். மற்றொருபுறம் சில ரசிகர்கள் இந்தக் கதாபாத்திரங்களின் கெமிஸ்ட்ரி அற்புதமாக வந்துள்ளது என கமெண்ட் செய்து, இதயங்களைப் பகிர்ந்தும் வருகின்றனர்.