விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியலில் நேற்று வெளியான ப்ரோமோ இணையத்தில் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என அனைத்திற்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதுதொடர்பாக ப்ரோமோக்கள் வெளியாகி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை இதுவரை பார்க்காதவர்களையும் பார்க்க வைத்து விடும். அதேசமயம் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி பார்வையாளர்கள் உடனுக்குடன் தங்கள் கருத்துகளை தெரிவிக்க ஏதுவாக உள்ளது. தவறு, சரி என அனைத்தையும் சுட்டிக்காட்டவும் செய்கிறார்கள். அதேசமயம் கடுமையாக கிண்டல் செய்யவும் செய்வார்கள். இதனை நெகட்டிவாக எடுத்துக் கொள்ளாமல் சீரியல், ரியாலிட்டி ஷோக்களுக்கு கிடைத்த பாசிட்டிவ் ப்ரோமோஷனாகவே சம்பந்தப்பட குழுவினர் எடுத்துக் கொள்கின்றனர்.
அந்த வகையில், நேற்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியலின் ப்ரோமோ கடுமையாக கிண்டலுக்கு உள்ளானது. இந்த சீரியலின் முதல் சீசன் 2018 ஆம் ஆண்டில் இருந்து 2021 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 2வது சீசன் கடந்தாண்டு ஜனவரி மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த தொடரில் திரவியம் ராஜகுமாரன், சித்தார்த், ஸ்வாதி கொண்டே, கேபிரியல்லா ஆகியோர் முதன்மை கேரக்டரில் நடித்து வருகின்றனர். இதனிடையே நேற்றைய எபிசோடில் அருணாச்சலம் குடும்பம் எல்லோரும் கோவிலுக்கு வந்திருந்த நிலையில், காவ்யா (கேபிரியல்லா) என்ற பெயரில் ஒரு இளம்பெண் குளத்தில் விழுகிறார். இதனைப் பார்த்த பார்த்தியோட மாமா, நம்ம காவ்யா தான் குளத்தில் விழுந்துட்டா என்று சொல்ல அவரும் ஓடி வந்து காப்பாற்றினால் அது கேபிரியல்லா இல்லை என தெரிய வரும் காமெடி காட்சிகள் ஒளிபரப்பாகியது.
இதில் அந்த இளம்பெண் குளத்தில் விழுந்தது கேலிக்குள்ளானது. அதேபோல் காப்பாற்ற சொல்லி கூச்சலிட்ட ப்ளூ சட்டை நபர் ஒருவரை பார்த்தி குளத்திற்குள் தள்ளி விட்டது என இரண்டு காட்சிகளும் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. “10 ரூபாய்க்கு நடிக்க சொன்னா 3 ரூபாய்க்கு நடிக்கிறா”, “நான் சிவனேன்னு தானே நின்னுட்டு இருந்தேன்” என ப்ளூ சட்டை நபர் புலம்புகிறார் என கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.