விஜய் டிவியில் ஆல் டைம் ஃபேவரட் நிகழ்ச்சியான 'குக்கு வித் கோமாளி' நிகழ்ச்சி கடந்த நான்கு சீசன்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த நிலையில், கடந்த சனிக்கிழமை முதல் ஐந்தாவது சீசன் புதுப்பொலிவுடன் தொடங்கியுள்ளது.
வி.டிவி கணேஷ், சுஜிதா, பிரியங்கா தேஷ்பாண்டே, வசந்த் வசி, சூப்பர் சிங்கர் பூஜா, ஸ்ரீகாந்த் தேவா, யூ டியூபர் இர்ஃபான், அக்ஷய் கமல், திவ்யா துரைராஜ் உள்ளிட்டோர் குக்குகளாக என்ட்ரி கொடுத்துள்ளனர். சுனிதா, புகழ், குரேஷி, சரத் உள்ளிட்ட பழைய கோமாளிகளுடன் சேர்ந்து புதிதாக அன்ஷிதா, கேமி, ராமர், வினோத், ஷப்னம் உள்ளிட்டோர் இணைந்துள்ளனர்.
செஃப் தாமுவுடன் பிரபலமான சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக இணைந்துள்ளார். இருப்பினும் செஃப் வெங்கடேஷ் பட் நிகழ்ச்சியில் இல்லாதது ரசிகர்களுக்கு பெரிய வருத்தமாகவே இருந்தது. ரசிகர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளும் வகையில் வீடியோ ஒன்றின் மூலம் "நான் மிகவும் கொடுத்து வைத்தவன். உங்கள் அனைவரின் மெசேஜ்களையும் பார்த்தேன். நான் உங்களை ஏமாற்ற மாட்டேன். உங்களுக்கு புதிய சர்ப்ரைஸ் ஒன்று காத்துக்கொண்டு இருக்கிறது" எனப் பேசி இருந்தார்.
அந்த வகையில் குக்கு வித் கோமாளி பாணியில் "டாப் குக்கு டூப் குக்கு" என்ற பெயரில் புதிய காமெடி கலந்த குக்கிங் ஷோ ஒன்று ஒளிபரப்பாகவுள்ளது என்பதற்கான ப்ரோமோ வெளியானது. ஸ்ட்ரெஸ் பஸ்டர் நிகழ்ச்சியான குக்கு வித் கோமாளிக்கு போட்டியாக சன் டிவி இந்தப் புதிய சமையல் நிகழ்ச்சியை களம் இறக்கியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியை வழங்கி வந்த மீடியா மேசன் நிறுவனம் கருத்து வேறுபாடு காரணமாக அங்கிருந்து விலகிய நிலையில், அவர்களுடன் இணைந்து வெங்கடேஷ் பட்டும் விலகி தற்போது சன் டிவியில் இருதரப்பும் கைகோர்த்துள்ளனர்.
இந்நிலையில், விஜய் டிவியில் பிரபலமான முகங்களான இருந்த பரத், மோனிஷா, தீபா, தீனா உள்ளிட்டோர் சன் டிவி நிகழ்ச்சியில் தற்போது கலந்து கொள்ள போகிறார்கள் என்பது வெளியான ப்ரோமோ மூலம் தெரியவந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் நடுவராக வெங்கடேஷ் பட் இணையவுள்ளார்.
இந்த ‘டாப் குக்கு டூப் குக்கு’ என்ற நிகழ்ச்சியில் சமைப்பதற்காக யாரெல்லாம் வரப்போகிறார்கள் என்பது குழப்பமாகவே இருத்தது. தற்போது இந்த நிகழ்ச்சியில் வைகைப்புயல் வடிவேலு இணைய உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால் லம்ப் அமௌண்ட் ஒன்று சம்பளமாக அவருக்கு பேசப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. அதனால் இந்த நிகழ்ச்சியில் நிச்சயம் வடிவேலு இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சன் டிவியில் வடிவேலுவின் என்ட்ரி அந்த நிகழ்ச்சியை வேறு லெவலுக்கு எடுத்துச் செல்லும் என்பதை எந்த சந்தேகமும் இல்லை.
விஜய் டிவியில் கடந்த நான்கு சீசன்களாக ஒளிபரப்பாகும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் டிவியில் களம் இறங்கும் இந்த ‘டாப் குக்கு டூப் குக்கு’ நிகழ்ச்சி எந்த அளவுக்கு வெற்றி பெரும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.