தமிழ், இந்தி தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த பிரபல நடிகர் பவன் மாரடைப்பால் உயிரிழந்தார்.


கர்நாடக மாநிலம், மாண்டியாவைச் சேர்ந்த பவன், நேற்று காலை 9 மணிக்கு மும்பையில் உள்ள தனது வீட்டில் உயிரிழந்தார். பவனின் இறுதிச் சடங்குகள் அவரது சொந்த ஊரான மாண்டியாவில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


25 வயதில் பவனின் இந்த அகால மரணம் தொலைக்காட்சி உலகினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு மாண்டியா சட்டப்பேரவை உறுப்பினர் ஹெட். டி. மஞ்சு உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்களும், தொலைக்காட்சி உலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இதேபோல் முன்னதாக சீரியல் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் அரவிந்த் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சின்னத்திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


திருமுருகன் இயக்கிய நாதஸ்வரம்’ சீரியலில் நடித்ததன் மூலமாக பிரபலமான நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் அரவிந்த் கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி உயிரிழந்தார்.


உடலைக் கட்டுக்கோப்பாகப் பேணிவந்த அரவிந்துக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் ஆனால், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.


தமிழ் சின்னத்திரை ஜோடிகளில் பலரது மனம் கவர்ந்த ஜோடியாக இவர்கள் வலம் வந்த நிலையில் அரவிந்தின் மரணம் இன்று வரை ஏற்றுக்கொள்ள முடியாததாக சீரியல் உலகினரை கவலையில் ஆழ்த்தியது.


இதேபோல், கன்னட நடிகர் விஜய ராகவேந்திராவின் மனைவி ஸ்பந்தனா மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


கன்னட சினிமாவில் நாயகன், குணச்சித்திர நடிகர், இயக்குநர், பாடகர் என பன்முகக் கலைஞராக வலம் வந்துள்ள விஜய் ராகவேந்திராவின் மனைவி ஸ்பந்தனா பேங்காக் சென்றிருந்தபோது ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்.


சின்னத்திரை தொடங்கி வெள்ளித்திரை வரை தொடரும் இளவயது மாரடைப்பு மரணங்களால் திரை உலகினரும் ரசிகர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.