சன் டிவியில் நாள் முழுவதும் சின்னத்திரை ரசிகர்களை குதூகலமாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிப்பது சீரியல்கள். அந்த வகையில் மதிய நேரங்களில் இல்லதரசிகளின் ஃபேவரட் சீரியல்களில் ஒன்றாக ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ஒரு தொடர் 'தாலாட்டு'. நல்ல கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் திடீரென ஜூன் 24ம்  தேதி முடிவுக்கு வந்தது. 


 



தாலாட்டு:


சூழ்ச்சியால் பிரிந்த அம்மா - மகன் இருவரும் பின்னர் ஒரு நாளில் சந்தித்து இணைந்த பிறகு ஏற்படும் சிக்கல்களும் பிரச்சனைகளும் தான் தாலாட்டு சீரியலின் மைய கதையாக இருந்தது. இந்த சீரியலின் ஹீரோவாக 'தெய்வமகள்' சீரியல் மூலம் பிரபலமான கிருஷ்ணாவும், ஹீரோயினாக 'தென்றல்' தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமான ஸ்ருதி ராஜும் நடித்து வந்தனர். அவர்களோடு ஸ்ரீதேவி அசோக், ஸ்ரீலதா, தரணி, சர்வேஷ் ராகவ், ரிஷி கேஷவ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தனர்.


700 எபிசோடுகளை கடந்து மிகவும் வெற்றிகரமாக விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் திடீரென முடிந்தது சின்னத்திரை ரசிகர்களுக்கு மட்டுமின்றி சீரியலில் நடித்த நடிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சீரியல் முடிவுக்கு வந்தது குறித்து ஹீரோவாக நடித்த கிருஷ்ணா கோபமாக தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.  


கோபப்பட்ட கிருஷ்ணா:


ஆகஸ்ட் மாதம் வரை 'தாலாட்டு' சீரியல் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஓடும் என சீரியலின் இயக்குனர் முன்னர் தெரிவித்துள்ளார். ஆனால் திடீரென எந்த காரணமும் இல்லாமல் அதற்குள் பாதியிலே முடித்தனர். அதற்கான காரணம் பற்றி சீரியலில் நடிப்பவர்களிடம் கூட தெரிவிக்கப்படவில்லை. அடுத்தடுத்து புது சீரியல்கள் ஒளிபரப்பாக தயாராக இருப்பதால் ஒரு சில சீரியல்கள் முடிக்கபட்டதாக கூறப்படுகிறது என்று கோபமாக தனது கருத்தினை தெரிவித்துள்ளார். கிருஷ்ணாவின் இந்த கருத்து சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 


கிருஷ்ணாவுக்கு முன்னர் தாலாட்டு சீரியலின் ஹீரோயினாக நடித்த ஸ்ருதி ராஜ் கூட சீரியல் பாதியிலேயே முடிக்கப்பட்டதை நினைத்து தனது ஆதங்கத்தை தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


அதே போல சன் டிவியில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வந்த 'மகராசி' சீரியலுக்கு எண்டு கார்ட் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.