தமிழ் தொலைக்காட்சிகளில் முதலிடத்தில் இருக்கும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் என்றுமே சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும். சன் டிவியில் காலை முதல் இரவு வரை ஒளிபரப்பாகும் ஒவ்வொரும் சீரியலும் வெவ்வேறு கதைக்களத்துடன் இருப்பதால் ரசிகர்கள் விரும்பி பார்த்து வருகிறார்கள். சன் டிவி சீரியல்கள் தான் பெரும்பாலும் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னிலை வகிக்கும். 


 


மகராசி:


அந்த வகையில் மதிய வேளைகளில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி  வரும் தொடர் 'மகராசி'. 2019 ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் சுமார் நான்கு ஆண்டுகளாக திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது. மதிய நேரத்தில் ஒளிபரப்பபடுவதால் ஏராளமான இல்லத்தரசிகளின் விருப்பமான தொடராக இருந்து வந்தது. 1030 எபிசோட்களையும் கடந்து ஒளிபரப்பான இந்த தொடர் டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் நல்ல ஒரு இடத்தை பிடித்து வந்தது. 


இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் மற்றும் என். சுந்தரேஸ்வரன் இயக்கிய இந்த சீரியலில் எஸ்.எஸ். ஆர்யன் மற்றும் ஸ்ரிதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க காயத்ரி யுவராஜ், மஹாலக்ஷ்மி, ரியாஸ் கான், பூவிலங்கு மோகன், ஸ்ரீ ரஞ்சினி  மற்றும் ஏராளமானோர் நடித்திருந்தனர். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த தொடர் ஜூலை மாதம் நிறைவடையும் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. அந்த வகையில் ஜூலை 1ம் தேதியான இன்று மகராசி சீரியலின் கிளைமாக்ஸ் காட்சியுடன் சீரியல் சுபம் கார்டு போட்டு நிறைவடைந்தது. 


 



முடிவுக்கு காரணம் என்ன?


அதிக ரசிகர்களால் பார்க்கப்படும் சீரியல்களில் மகராசி சீரியலும் ஒன்றாகும். இந்த சீரியல் முடிவடைந்தது அந்த ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தத்தை கொடுக்கிறது. அதே போல சன் டிவியில் மற்றுமொரு பிரபலமான, நல்ல வரவேற்பை பெற்ற தாலாட்டு சீரியலும் சமீபத்தில் தான் நிறைவு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 


ஏராளமான புதிய சீரியல்கள் சன் டிவியில் படையெடுக்க உள்ளதால் மகராசி, தாலாட்டு உள்ளிட்ட சீரியல்கள் திடீரென முடிக்கப்பட்டது என்றும் டி.ஆர்.பி ரேட்டிங் மிக குறைவாக இருக்கும் சீரியல்களுக்கு எண்டு கார்டு போடப்பட்டுள்ளதாகவும், சமீப காலமாக கதையில் விறுவிறுப்பு இல்லாமல் ஜவ்வு போல இழுந்து வந்ததாலும் ஸ்வாரஸ்யம் குறைந்ததாலும் இந்த சீரியல்களை முடிக்க சேனல் முடிவு எடுத்ததாகவும் இணையத்தில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருப்பினும் இத்தனை ஆண்டுகளாக இல்லதரிசிகளின் தினசரி அட்டவணையில் இடம்பெற்ற ஒரு தொடர் இனிமேல் ஒளிபரப்படாது  என்பது  சற்று வருத்தத்தை கொடுக்கிறது.