வெள்ளித்திரை நடிகர்கள் மட்டுமின்றி சின்னத்திரை நடிகர்களும் சக நடிகர்களுடன் காதல் ஏற்பட்டு திருமண பந்தத்தில் இணைவது என்பது காலம் காலமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஏராளமான  சின்னத்திரை நட்சத்திரங்கள் ரீல் ஜோடிகளாக இருந்து ரியல் ஜோடிகளாக மாறியுள்ளனர்.


ராஜ்கமல் - லதா ராவ், சந்தோஷி - ஸ்ரீகர், ஸ்ரீ - ஷமிதா, போஸ் வெங்கட் - சோனியா, செந்தில் குமார் - ஸ்ரீஜா, பிரஜின் - சாண்ட்ரா, ப்ரீத்தி -சஞ்சீவ், தேவதர்ஷினி - சேத்தன் முதல் சமீபத்தில் திருமணமான பிரிட்டோ - சந்தியா, ரேஷ்மா - மதன், தீபிகா - ராஜா வெற்றி என பட்டியல் நீண்டு கொண்டே போகும். அந்தப் பட்டியலில் இணையப்போகும் மற்றுமொரு சின்னத்திரை ஜோடி தான் அரவிஷ் - ஹரிகா ஜோடி.   


 



சன் டிவியில் மிகவும் பிரபலமான சீரியலாக உள்ள சுந்தரி சீரியல் முதல் சீசன் முடிவடைந்து சில மாதங்களுக்கு முன்னர் தான் இரண்டாம் சீசன் தொடங்கியது. இந்த இரண்டு சீசன்களிலுமே கிருஷ்ணா என்ற முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் அரவிஷ். கோயம்புத்தூரைச் சேர்ந்த அரவிஷ் சன் டிவியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான 'தென்றல்' சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர். தற்போது சுந்தரி மற்றும் இலக்கியா தொடர்களில் முக்கியமான ரோலில் நடித்து வருகிறார். 


சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'திருமகள்' சீரியலின் கதாநாயகியாக நடித்து வருபவர் ஹரிகா. ஆந்திர மாநிலம் அனந்தபூரைச் சேர்ந்த ஹரிகா இந்த சீரியல் மூலம் தான் சின்னத்திரை உலகில் அடியெடுத்து வைத்தார். முதல் அனுபவமாக இருந்தாலும் ரசிகர்களை எளிதில் கவர்ந்து தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை சேர்த்துள்ளார். 


 



சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான செலிபிரிட்டிகளாக இருந்து வரும் அரவிஷ் மற்றும் ஹரிகா இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்த நிலையில் இருவரும் அவர்களின் காதலை வெளிப்படையாக அறிவித்தனர். காதலர்களாக இணைந்து இருவரும் சோசியல் மீடியாவில் போடும் ரீல்ஸ் ரசிகர்களின் லைக்ஸ்களைக் குவித்து வந்தது. அந்த வகையில் அரவிஷ் மற்றும் ஹரிகா இருவரின் வீட்டாரும் காதலுக்கு க்ரீன் சிக்னல் கொடுக்க, நிச்சயதார்த்தத்திற்கு தயாராகி வருகிறார்கள் இந்த சின்னத்திரை ஜோடிகள். 


வரும் நவம்பர் 19ம் தேதி பெற்றோர், உறவினர், நெருங்கிய நண்பர் வட்டாரம் சூழ திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. இருவருமே சின்னத்திரை பிரபலங்கள் என்பதால் நிச்சயம் பல சின்னத்திரை செலிபிரிட்டிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.