சன் டிவியின் 'சந்திரலேகா' புகழ் ஸ்வேதா பண்டேகருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.
சன் டிவியின் 'சந்திரலேகா' சீரியலில் சந்திரா என்ற கதாபாத்திரத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகை ஸ்வேதா பண்டேகர் திருமணம் இனிதே நேற்று நடைபெற்றது. பல ஆண்டுகளாக இந்த மெகா மெகா சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிலையில் அக்டோபர் 8ம் தேதி தான் எண்டு கார்டு போடப்பட்டது.
ஸ்வேதாவை மணமுடித்த மால் மருகா :
ஸ்வேதா பண்டேகர் திருமணம் செய்ததும் ஒரு சின்னத்திரை பிரபலத்தை தான். ஜீ தொலைக்காட்சி மற்றும் சன் டிவியில் பல சீரியல்களில் நடித்தவர் மற்றும் சன் மியூசிக் தொகுப்பாளரான காதலர் மால் மருகா என்பவரை தான் ஸ்வேதா பண்டேகர் கரம் பிடித்துள்ளார்.
விளம்பரங்களில் நடித்து வந்த ஸ்வேதாவிற்கு அஜித் தங்கையாக ஆழ்வார் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அடுத்தது நேரடியாக கதாநாயகி தான். 2008ம் ஆண்டு வெளியான 'வள்ளுவன் வாசுகி' படத்தில் ஹீரோயினாக சத்யா ஜோடியாக நடித்திருந்தார். மேலும் பல படங்களில் நடித்துள்ள ஸ்வேதா நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'பூலோகம்' திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
சந்திராவாக வாழ்ந்த ஸ்வேதா :
வெள்ளித்திரையில் அந்த அளவு பிரபலமாகவில்லை என்றாலும் சின்னத்திரை மூலம் இல்லத்தரசிகளின் செல்ல மகளாக சந்திரவாக வலம் வந்தார் ஸ்வேதா. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பான இந்த சீரியல் சன் டிவி ரசிகர்களின் மிகவும் ஃபேவரட் சீரியலாக இருந்து வந்தது. தற்போது தங்களின் மிகவும் அபிமான நடிகைக்கு திருமணம் முடிந்ததில் மிகவும் சந்தோஷமாக இருக்கும் ரசிகர்கள் இந்த புதுமண தம்பதியினரை வாழ்த்தி வருகிறார்கள்.
ஸ்வேதா பண்டேகர் - மால் மருகா திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பரவி வருகின்றன. பல சின்னத்திரை பிரபலங்களும் இந்த விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.