சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பல ஆண்டுகாலமாக மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஒரு முன்னோடி சேனலாக விளங்குவது சன் டிவி. சின்னத்திரை ரசிகர்களை கவரும் வகையில் ஏராளமான நிகழ்ச்சிகள் குறிப்பாக இல்லத்தரசிகளை கவரும் மெகா தொடர்களின் அஸ்திவாரமாக விளங்கியது சன் டிவி. இந்த சேனலில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான பல சீரியல்கள் கூட ரசிகர்களின் நெஞ்சங்களில் இன்றளவும் நீங்காமல் நினைவுகளில் நிலைத்து இருக்கிறது. 


அந்த வகையில் அப்பாவின் பாசத்துக்காக ஏங்கும் ஒரு மகளை சுற்றி நடைபெறும் கதைக்களத்தை மையமாக வைத்து பல ஆண்டுகளாக பெரிய அளவு பட்ஜெட்டில் ஒளிபரப்பான தொடர் 'கண்ணான கண்ணே'. பப்லு பிரித்திவிராஜ், நிமிஷிதா, ராகுல் ரவி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த இந்த தொடர் பட்டி தொட்டி எங்கிலும் உள்ள சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. டி.ஆர்.பி ரேட்டிங்கின் படி டாப் 10 இடங்களில் என்றுமே இடம்பிடித்து வந்த இந்த தொடர் கடந்த மார்ச் மாதம் தான் முடிவுக்கு வந்தது.  



அதிக பட்ஜெட்டில் ஒளிபரப்பான 'கண்ணான கண்ணே' தொடர் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து மீண்டும் ஒரு மெகா பட்ஜெட் தொடர் ஒன்றை புதிதாக தயாராக்க உள்ளார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர். ஃபிலிம் வோர்ல்ட் நிறுவனத்துடன் இணைந்து சன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படும் இந்த தொடரில் நான்கு புதிய கதாநாயகிகள் அறிமுகமாக உள்ளனர் என்றும் 50க்கும் மேற்பட்ட துணை கதாபாத்திரங்கள் நடிக்க உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இந்த புதிய சீரியல் குறித்த வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. கூடிய விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியிலும் சன் டிவி சீரியல்களின் டை ஹார்ட் ஃபேன்ஸ்களுக்கும் மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது.