திரைப்படங்களுக்கு இருக்கும் வரவேற்பு போலவே சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அதனால் திரைப்படங்களில் எந்த அளவுக்கு திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுமோ அதே போல சீரியல்களை விறுவிறுப்பு குறையாமல் சிறப்பான கதை அம்சத்துடன் தினமும் சின்னத்திரை ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்கள். அப்படி பல வித்தியாசமான சீரியல்களை ஒளிபரப்புவதில் முன்னோடியாக இருந்து வருகிறது சன் டிவி. மெகா தொடர்களுக்கு மிகவும் பிரபலமான சன் டிவியில் காலை முதல் இரவு வரை எண்ணற்ற சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. ஒவ்வொரு தொடருக்கும் ஏராளமான ரசிகர் கூட்டம் உள்ளது.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு சில சீரியல்களின் கிளைமாக்ஸ் காட்சி நெருங்கி வருவதால் அடுத்தாக ஒளிபரப்பாக தயாராக காத்திருக்கின்றன புதிய தொடர்கள். பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் தொடர் நிறைவு பெற உள்ளது. அதன் கிளைமாக்ஸ் காட்சி விரைவில் வர உள்ளதால் பாண்டவர் இல்லம் சீரியலில் ரசிகர்களான இல்லத்தரசிகள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். அதே போல இரவு ஒளிபரப்பாகும் அன்பே வா சீரியலுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்த சீரியலும் விரைவில் முடிவடைய உள்ளது என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. இப்படி ஒரே நேரத்தில் பல சீரியல்கள் முடிவுக்கு வருவதால் ரசிகர்களை மீண்டும் குதூகலப்படுத்த புதிய தொடர்கள் என்ட்ரி கொடுக்க உள்ளன.
அபியும் நானும் தொடர் மூலம் பிரபலமான ஷ்யாம் ஜி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் சோனியா சுரேஷ். இந்த தொடர் ஜூன் 26ம் தேடி முதல் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. அதே போல தர்ஷக் மற்றும் அக்ஷதா தேஷ்பாண்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரில்லர் சீரியலான 'அனாமிகா' சீரியலும் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. பல நாட்களுக்கு பிறகு திரில்லர் ஜானரில் ஒரு சீரியல் சின்னத்திரையில் ஒளிபரப்பாக உள்ளதால் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர் ரசிகர்கள்.
அது தவிர வேறு சில சீரியல்களும் சன் டிவியில் என்ட்ரி கொடுக்க உள்ளன. சித்தி 2 சீரியலில் யாழினி என கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை தர்ஷனா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'தமிழும் சரஸ்வதியும்' சீரியலில் வசுந்தரா என்ற கதாபாத்திரத்தில் பின்னி பிணைந்து நடித்து வந்த தர்ஷனாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கவே மீண்டும் சன் டிவிக்கு போய்விட்டார். பலரின் பேவரட் நடிகையாக இருக்கும் தர்ஷனா புதிய சீரியலில் மெயின் ரோலில் நடிக்க இருப்பது அவரின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. விரைவில் அந்த தொடரும் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
சன் டிவியில் என்ட்ரி கொடுக்கும் புதிய சீரியல்களால் சின்னத்திரைக்கு பல புது முகங்கள் அறிமுகமாக உள்ளனர்.