Siragadikka Aasai Written Update : 'சிறகடிக்க ஆசை' சீரியல் இன்றைய (ஜூன் 11 ) எபிசோடில் மீனாவை காணவில்லை என முத்துவும் அண்ணாமலையும் பதட்டத்தில் இருக்க ரோகிணி சமைத்ததை சாப்பிட்டு கொண்டு இருக்கிறார்கள் விஜயா, மனோஜ், ரோகிணி மற்றும் ரவி. ரோகிணியின் சமையலை ஆஹா ஓஹோ என பாராட்டுகிறான் மனோஜ். விஜயா அண்ணாமலையையும் சாப்பிட வரச்சொல்லி அழைக்க அவர் "எனக்கு பசிக்கல. மீனா இதுவரைக்கும் வீட்டுக்கு வரல அதை பத்தி நீங்க யாருமே கவலைப்படல" என சொல்ல "நாங்க என்ன பண்ணோம். முத்து தான் காலையில மீனா கிட்ட சண்டை போட்டாரு" என சொல்கிறாள்.



அண்ணாமலை முத்துவிடம் "நீ இதை பத்தி என்கிட்டே சொல்லவே இல்லையே. எதுக்காக சண்டை போட்ட" என கேட்கிறார். " நான் எதுவும் சண்டை போடல அப்பா. அவ தான் தேவையில்லாமல் என்கிட்ட சிடுசிடுன்னு பேசுனா" என சொல்லி நடந்த விஷயத்தை சொல்கிறான். அதை கேட்ட அண்ணாமலை "இன்னும் எத்தனை நாளுக்கு தான் அதையே பேசி பேசி அவளை காயப்படுத்துவ. எது பேசுனாலும் யோசிச்சு பேசு என உனக்கு எத்தனை தடவ தான் சொல்றது. எல்லாத்துலயும் விளையாட்டா" என முத்துவை திட்டுகிறார். 


சீதா முத்துவுக்கு போன் செய்து கந்துவட்டி சுதாகர் போன வாரம் தான் ஜெயிலில் இருந்து வந்தான். அவன் அக்காவை ஏதாவது பண்ணியிருப்பானோ என பயமா இருக்கு என சொல்ல முத்து செல்வத்தை அழைத்து கொண்டு சுதாகரை தேடி அவனுடைய வீட்டுக்கு போகிறான். சுதாகரை பார்க்க விடாமல் அவனுடைய அடியாட்கள் முத்துவையும் செல்வத்தையும் தாக்க முத்து அவர்களுடன் சண்டை போட்டு சுதாகர் இருக்கும் ரூமுக்கு போய் பார்த்து அதிர்ச்சி அடைகிறான். உடம்பு முழுக்க கட்டு போட்டு சுதாகர் நகர கூட முடியாத நிலையில் இருக்கிறான். மூன்று நாட்களுக்கு முன்னர் விபத்து ஏற்பட்டு இப்படி நடந்துவிட்டது. அவன் எழுந்து நடக்கவே மூணு மாசமாகும் என டாக்டர் சொல்லியதாக சொல்கிறார்கள். இதனால் முத்துவின் பதட்டம் மேலும் அதிகரிக்கிறது. 



சத்யா சிட்டியிடம் மீனா காணாமல் போனதை பற்றி சொல்ல அவன் முத்துவை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் சத்யாவை முத்துவுக்கு எதிராக திருப்பிவிடுகிறான். போலீசில் போய் முத்து மீது புகார் கொடுக்க சொல்கிறான். முத்து தான் மீனாவை கடத்தி வைத்து இப்படி ட்ராமா போடுகிறான் என சொல்லி சத்யாவை தூண்டிவிடுகிறான். அதை கேட்ட சத்யாவும் போலீஸ் ஸ்டேஷன் கிளம்புகிறான்.


அண்ணாமலை முத்துவுக்கு போன் செய்து மீனா பற்றி ஏதாவது தகவல் கிடைத்ததா என கேட்கிறார். வழக்கமாக மீனா செல்லும் அனைத்து இடத்திலும் தேடிவிட்டோம், அவளுடைய ப்ரெண்ட்ஸ் கிட்ட கூட விசாரித்துவிட்டோம். எந்த தகவலும் தெரியவில்லை என முத்து சொல்கிறான். போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் புகார் ஒன்று கொடுக்க சொல்லி அண்ணாமலை சொல்கிறார். அது முத்துவின் பயத்தை மேலும் அதிகரிக்கிறது. 


பின்னர் அண்ணாமலை சொன்னது போல முத்து போலீஸ் ஸ்டேஷன் போக அங்கே சத்யா ஷாக்காகிறான். இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட் கதைக்களம்.