சின்னத்திரை ரசிகர்களிடம் மிகவும் பிரபலமான இயக்குநர் திருமுருகன், மீண்டும் நீண்ட இடைவெளிக்குப் பின் சீரியல் இயக்கப்போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 


மெட்டி ஒலி இயக்குநர்


சென்னை திரைப்பட கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த திருமுருகன், 1998 ஆம் ஆண்டு தூர்தர்ஷன் சேனலில் ஒளிபரப்பான ‘கோகுலம் காலனி’ சீரியல் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து நல்லூர் காவல் நிலையம், அக்‌ஷயா, பஞ்சவர்ணக்கிளி, அப்பு குப்பு என பல சீரியல்களை தூர்தர்ஷனுக்காக இயக்கினார். பின்னர் ராஜ் டிவியில் ஒளிபரப்பான துரு பிடிக்கும் மனசு சீரியலை இயக்கியிருந்தார். 


இந்த நிலையில் தான் சன் டிவியில் 2002 ஆம் ஆண்டு மெட்டி ஒலி சீரியல் ஒளிபரப்பானது. கிட்டதட்ட 3 ஆண்டுகள் ஒளிபரப்பான இந்த சீரியல் இன்றைக்கும் பலரின் பேவரைட் சீரியல்களில் ஒன்றாக உள்ளது. கொரோனா ஊரடங்கின் போது மெட்டி ஒலி சீரியல் மறுஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது போட்டிப் போட்டுக் கொண்டு மற்ற சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் வண்ணம் டிஆர்பி ரேட்டிங்கில் கலக்கியது. 


இந்த சீரியலில் கோபி என்னும் கேரக்டரில் திருமுருகன் நடித்திருந்தார். ரசிகர்களும் திருமுருகன் பெயரை மறந்து கோபி என்றே அவரை அழைக்க தொடங்கினர்.  இதனைத் தொடர்ந்து 5 ஆண்டுகள் கழித்து 2010 ஆம் ஆண்டு மீண்டும் சன் டிவிக்காக ‘நாதஸ்வரம்’ சீரியலை இயக்கினார். இந்த சீரியலும் ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்தது. இந்த சீரியலின் எபிசோட் ஒன்று நேரலையாக ஒளிபரப்பப்பட்டு கின்னஸ் சாதனைப் படைத்தது. தொடர்ந்து தேன் நிலவு, குல தெய்வம், கல்யாண வீடு என அடுத்தடுத்து சீரியல்களை இயக்கினார். 



சினிமாவில் திருமுருகன் 


இதற்கிடையில் 2006 ஆம் ஆண்டு பெரிய திரைக்குள் நுழைந்த திருமுருகன், ‘எம்டன் மகன்’ படத்தின் மூலம் இயக்குநரானார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தை இயக்கிய அவர்,  இன்று வரை படம் இயக்கவில்லை. அதேசமயம் குறும்படங்கள், யூட்யூப் வலைத்தள தொடர்களை இயக்கிய திருமுருகன் மீண்டும் சீரியல் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். 


இந்நிலையில் மீண்டும் அவர் விரைவில் சீரியல் இயக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட்  இயக்குநரான திருச்செல்வம் மீண்டும் ‘எதிர்நீச்சல்’ சீரியல் மூலம் கம்பேக் கொடுத்த நிலையில், திருமுருகனும் கம்பேக் கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.