சின்னத்திரை நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 


சன் டிவி சேனலில் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான தொடர் ‘நாதஸ்வரம்’. இயக்குநர் ‘மெட்டி ஒலி’ இயக்குநர் திருமுருகன் இயக்கிய  இந்த தொடர் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் பல புதுமுகங்கள் நடித்து மக்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமாகினர். அப்படி  ‘நாதஸ்வரம்’ சீரியலில் நடித்ததன் மூலமாக  நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவும் பிரபலமடைந்தார். 


இவருக்கும் அரவிந்த் சேகர் என்பவருக்கும் கடந்த ஆண்டு இரு வீட்டார் ஏற்பாட்டில் திருமணம் நடந்தது. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் அவர், அடிக்கடி தன் கணவருடன் எடுத்த ரீல்ஸ்களை பதிவிடுவது வழக்கம். இதனிடையே ஸ்ருதியின் கணவர் அரவிந்த்,  ஃபிட்னஸில் அதிக ஆர்வம் கொண்டவர். அவர்  ’மிஸ்டர் தமிழ்நாடு 2022’ பட்டம் வென்றிருக்கிறார். 30 வயது ஆன நிலையில் தனது உடல் நலத்தில் எப்போதும் அக்கறையுடன் இருக்கும் அரவிந்த் உடற்பயிற்சி, உணவு விஷயங்களில் மிகுந்த கவனத்துடன் இருப்பார். 


இந்நிலையில், நேற்று திடீரென மாரடைப்பால் அரவிந்த் சேகர் மரணமடைந்தார். அரவிந்த் உயிரிழந்த தகவல் சின்னத்திரை வட்டாரத்தில் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களும் எங்களால் இதை நம்பவே முடியவில்லை என தெரிவித்ததோடு ஸ்ருதி ஷண்முக பிரியாவுக்கு ஆறுதல் தெரிவித்தும் வருகின்றனர். திருமணத்துக்கு பின் சீரியலை விட்டு விலகி ஸ்ருதி, கணவருடன் இணைந்து தொழில் கவனம் செலுத்தி வந்தார். ஆனால் திருமணமாகி ஓராண்டு மட்டுமே ஆன நிலையில் கணவர் அரவிந்த் சேகரின் மரணம் அவருக்கு பேரிடியாக அமைந்துள்ளது. 


இந்நிலையில் தன் கணவர் குறித்து சமூக வலைத்தளங்களில் ஸ்ருதி ஷண்முக பிரியா உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “உன் உடல் மட்டும் தான் பிரிந்துள்ளது. ஆனால் உன் ஆன்மாவும், மனமும் என்னைச் சூழ்ந்து இப்போதும் மட்டுமல்லாமல் என்றென்றும் என்னை பாதுகாக்கும். உங்கள் மீதான என் அன்பு இப்போது மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. நாங்கள் ஏற்கனவே ஒருவருக்கொருவர் நிறைய நினைவுகளை வைத்திருந்தோம். அதை நான் வாழ்நாள் முழுவதும் மதிக்கிறேன். உன்னை மிஸ் பண்றேன். மேலும் உன்னை நேசிக்கிறேன் அரவிந்த்! என் அருகில் உன் இருப்பை உணர்கிறேன்” என பதிவிட்டு அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளார். அவருக்கு அனைவரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.