பிரபல சின்னத்திர நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் அரவிந்த் சேகர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என்னும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ் சின்னத்திரை உலகில் பிரபல தம்பதியாக வலம் வந்த தம்பதி  ஸ்ருதி சண்முகப்பிரியா - அரவிந்த சேகர்.



இயக்குநர் திருமுருகன் இயக்கத்தில் வெளியான பிரபல தொடரான நாதஸ்வரம் மூலம்  சின்னத்திரை உலகில் பிரபலமானவர் ஸ்ருதி. தொடந்து வாணி ராணி, கல்யாணப்பரிசு தொடங்கி பாரதி கண்ணம்மா வரை பல தொடர்களில் நடித்துள்ளார்.


இவரது கணவர் அரவிந்த் பிரபல பாடி பில்டர். அது மட்டுமின்றி ஜிம் ட்ரெய்னராகவும் வலம் வந்த அரவிந்த் தன் உடலை கட்டுக்கோப்பாகப் பேணுவதில் நாட்டம் கொண்டவர்.  இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் தான் திருமணம் செய்து கொண்டனர்.


தொடர்ந்து தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் புகைப்படங்கள்,  வீடியோக்கள் பதிவிட்டு தங்கள் ரசிகர்களை இந்தத் தம்பதி மகிழ்வித்து வந்தனர்.


இந்நிலையில் நேற்று (ஆக.02) அரவிந்துக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் ஆனால், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


சின்னத்திரை ஜோடிகளில் பலரது மனம் கவர்ந்த ஜோடியாக இருவரும் வலம் வந்த நிலையில் அரவிந்தின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 






இணையத்தில் காதல் பறவைகளாக வலம் வந்த இந்தத் தம்பதி இறுதியாகப் பகிர்ந்த வீடியோவும் இணையத்தில் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது. சின்னத்திரைக் கலைஞர்களும் ரசிகர்களும் ஸ்ருதிக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.