பிரபல சீரியல் நடிகை நக்ஷத்ராவுக்கு குழந்தை பிறந்துள்ளதை முன்னிட்டு அவருக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 


தமிழில் 'கிடாரி பூசாரி மகுடி' என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நக்ஷத்ரா.கேரளாவைச் சேர்ந்த இவர், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியல் மூலம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். அதில் வெண்ணிலா என்னும் கேரக்டரில் அப்பாவி பெண்ணாக நடித்திருந்தார். மனைவியை இழந்த தன் மாமாவையும், அவரது குழந்தையையும் நேசிக்கும் அவரது கேரக்டர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. 


இதனைத் தொடர்ந்து  கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘வள்ளி திருமணம்’  சீரியலில் அவர் நடித்து வந்தார். இந்த சீரியலில் அடாவடி கிராமத்துப் பெண்ணாக நக்ஷத்ரா கேரக்டர் உருவாக்கப்பட்டிருந்தது. இப்படியான நிலையில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி கடந்தாண்டு ஜூலை மாதம் விஷ்வா சாம் என்பவரை திடீரென திருமணம் செய்து கொண்டார். 


திருமணம் தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்த போது தான் சின்னத்திரை உலகுக்கே இந்த விஷயம் தெரிய வந்தது. இந்த திடீர் திருமணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் பலரும் தம்பதியினருக்கு வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர். டாட்டூ ஆர்டிஸ்ட்டாக இருக்கும் விஷ்வா சாம் ஜீ தமிழ் சேனலில் எக்ஸிகியூட்டிவ் பிரொடியூசராகவும் உள்ளார். அதேசமயம் இந்த திருமணம் சர்ச்சையையும் கிளப்பியது. 


சீரியல் நடிகை ஸ்ரீநிதி, ‘ நக்‌ஷ்த்திரா வாழ்க்கையை காப்பாற்ற முடியவில்லை என்றும், அவள் கொடுமை படுத்தப்படுகிறாள்’ என்றும் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த நக்‌ஷ்த்திரா, “தன்னுடைய தாத்தாவுக்கு டல்நிலை சரியில்லாத காரணத்தால் தான் திடீர் திருமணம் நடந்தது’ என தெரிவித்தார். 


இதனைத் தொடர்ந்து கர்ப்பமடைந்த சீரியல் நடிகை நக்‌ஷத்திராவுக்கு கடந்த ஜனவரி மாதம் ரசிகர்களுக்கு அந்த மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தார். இப்படியான நிலையில் நக்‌ஷத்திரா - விஷ்வா தம்பதியினருக்கு குழந்தை பிறந்துள்ளது. இதனை நக்‌ஷத்திரா  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  மேலும் அதில், “கடந்த பல மாதங்களாக வயிற்றில் உதைக்கப்பட நிகழ்வை நேரடியாக பார்த்து விட்டோம். எங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது” என அவர் தெரிவித்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.