சரவணன் - மீனாட்சி புகழ் செந்தில் -ஸ்ரீஜா ஜோடிக்கு நேற்று குழந்தை பிறந்துள்ளது. திருமணமாகி சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்களுக்கு குழந்தை பெற்றுள்ள செந்தில் - ஸ்ரீஜா ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 


விஜய் தொலைக்காட்சியில் வெளியான மதுர சீரியலின் மூலம் பிரபலமான ஜோடி செந்தில் - மீனாட்சி. முதலில் ரேடியோ மிர்ச்சியில் ஆர்.ஜேவாக பணிபுரிந்து தன் குரலுக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்த செந்தில் மிர்ச்சி செந்தில் என்றே மக்களால் அழைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து மதுர சீரியலின் மூலம் நடிகர் அவதாரமெடுத்து தொலைக்காட்சி ரசிகர்களை ஈர்த்தார்.


இத்தொடரில் இவருடன் இணைந்து நடித்த கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீஜாவுக்கும் ரசிகர்களின் எண்ணிக்கைக் கூட, இருவரும் சீரியல் உலகின் ஆதர்ச ஜோடியாக மாறினர். இதனையடுத்து ஹிட் ஜோடியான செந்தில் - ஸ்ரீஜா சரவணன் - மீனாட்சி தொடரில் இணைந்து நடித்தனர்.


விஜய் டிவி வரலாற்றில் வெற்றிகரமான சீரியலாக உருவெடுத்த இந்தத் தொடர் ரேட்டிங் அள்ளியது. இச்சூழலில் தொடர்ந்து அனைவராலும் ரசிக்கப்பட்ட செந்தில் - ஸ்ரீஜா இருவரும் ஒரு நடிப்பைத் தாண்டி காதலில்  விழுந்தனர்.


ரீல் ஜோடியாக வலம் வந்த இவர்கள் 2014ஆம் ஆண்டு  கொண்டாட்டமாக திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்தையும் சீரியல் போல பிரமாண்டமாக நடத்தியது விஜய் டிவி. திருமணம் ஆன பின்னரும்  ‘மாப்பிள்ளை’ சீரியலில் இந்த ஜோடி ஒன்றாக இணைந்து நடித்தது.


அதன் பின்னர்  ஸ்ரீஜா சீரியல்களில் இருந்து விலகிய நிலையில், இருவரும் சிறிது காலம் லைம்லைட்டில் இருந்து விலகி இருந்தனர்.


மற்றொருபுறம், இயக்குநர் சேரனின் தவமாய் தவமிருந்து திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான மிர்ச்சி செந்தில் தொடர்ந்து எவனோ ஒருவன், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், வெண்ணிலா வீடு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.


சுமார் 8 ஆண்டுகளாக குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இந்த ஜோடி இருந்து வந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் ஸ்ரீஜா கருவுற்றிருப்பதாகத் தெரிவித்து அவரது வளைகாப்பு புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.


“நாங்கள் விரைவில் பெற்றோராக போகிறோம். எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என்று செந்தில் பகிர்ந்திருந்த நிலையில், இவர்களது ரசிகர்கள் உற்சாகமாக வாழ்த்து தெரிவித்தனர்.


இந்நிலையில் இந்த ஜோடிக்கு நேற்று (ஜனவரி.04) ஆண் குழந்தை பிறந்துள்ளது. ”பெற்றோர்களாக பிறந்திருக்கிறோம் எங்கள் மகனால் நேற்று. நேற்று எங்கள் மகனுக்கு பெற்றோராக பிறந்துள்ளோம்” என உணர்ச்சிப் பெருக்குடன் பகிர்ந்துள்ளார்.


 






இந்த ஜோடிக்கு இவர்களது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.