விஜய் டிவியில் கிளாசிக் ரியாலிட்டி ஷோவாக பல ஆண்டுகளாக கலக்கிவரும் நிகழ்ச்சி 'நீயா நானா' (Neeya Naana). தொடக்கம் முதல் இன்று வரை கோபிநாத் தான் இந்த நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். ஒவ்வொரு வாரமும் மாறுபட்ட தலைப்புகள் குறித்து இரு தரப்பினரும் மிகவும் வெளிப்படையாக விவாதித்துக் கொள்வது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
சமூக அக்கறை கொண்ட தலைப்புகள் மட்டுமின்றி உடல் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்கள், குடும்பம், தலைமுறை, உணவு, கலாச்சாரம், கட்டுப்பாடுகள் இப்படி பல சுவாரஸ்யமான தலைப்புகளை தேர்ந்து எடுப்பதிலேயே அந்த நிகழ்ச்சியை பாதி வெற்றியை அடைந்து விடுகிறது. பங்கேற்பாளர்களின் விவாதங்கள், பாரபட்சம் பார்க்காமல் கோபிநாத்தின் சரியான அணுகுமுறை, சிறப்பு விருந்தினர்களின் அறிவுரை இப்படி பல காரணிகளின் அடிப்படையின்கீழ் இந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் தவறாமல் ரசித்து வருகிறார்கள்.
கடந்த வாரம் பொருளாதார ரீதியாக வசதியாக இருக்கும் தங்கைகள் அவர்களின் அண்ணன்களின் பொருளாதார நிலையை நினைத்து மிகவும் உருக்கமாக பேசி விவாதித்த எபிசோட் ரசிகர்கள் மத்தியில் உணச்சி பொங்க வைத்தது. இந்நிலையில், அந்த வகையில் இந்த வாரம் நீயா நானாவின் என்ன தலைப்பு குறித்து விவாதிக்கப்பட உள்ளது என்பதற்கான ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான 'மஞ்சும்மெல் பாய்ஸ்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பைப் பெற்றது. அதை இந்த வார தலைப்பில் சம்பந்தப்படுத்தி ஆர்பாட்டமாய் நண்பர்களுடன் கூட்டமாக அட்டகாசம் செய்யும் நண்பர்கள் கூட்டத்தால் பொதுமக்கள் எந்த அளவுக்கு எரிச்சலும் அவதியும் படுகிறார்கள் என்பது குறித்து இந்த வாரம் விவாதிக்கப்படுகிறது.
ஒரு பக்கம் நண்பர்களுடன் அட்டகாசம் செய்வது தான் கெத்து என கம்பீரமான அவர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். அதைப் பொறுமையாக கேட்டுக் கொண்டு இருந்த பொதுமக்கள் தரப்பில் இருந்து வந்திருந்தவர்கள் “உங்களின் சந்தோஷத்திற்காக நீங்கள் செய்யும் செயல் அடுத்தவர்களை எந்த அளவு பாதிக்கிறது என்பது பற்றி என்றாவது யோசித்து இருக்கிறீர்களா?” என விதிகளை மீறி அவர்கள் நடந்து கொள்வதை நேரடியாக கேட்கிறார்கள்.
இன்றைய தலைமுறையினர் பலரும் 'மஞ்சும்மல் பாய்ஸ்' போல தான் அவர்களின் சந்தோஷத்தை மட்டுமே பார்க்கிறார்கள், அப்படிப்பட்டவர்களுக்கு இந்த வார நீயா நானா எபிசோட் நல்ல ஒரு பாடமாக இருக்கும் என்பது இவர்கள் தரப்பு வாதமாக இருக்கிறது. ஆனால் எதிர்தரப்பு இளைஞர்கள் இவர்கள் பூமர் போல் நடந்துகொள்கிறார்கள் என உற்சாகத்துடன் மோத இந்த வார நீயா நானா எபிசோட் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.