விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் இன்று ஒளிபரப்பாகும் எபிசோடின் ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரையில் ரசிகர்களின் மனதில் முதல் இடம் பிடிக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘நீயா நானா’. வாரந்தோறும் ஞாயிற்றுகிழமை நண்பகல் 12 மணிக்கு ஒளிபரப்பப்படும் இந்நிகழ்ச்சி ஒரு குறிப்பிட்ட தலைப்பை எடுத்து அதன் சாதகம், பாதகம் போன்றவற்ற சம்பந்தப்பட்ட மக்களின் கருத்துகளை கொண்டு அலசி ஆராய்வது ஆகும். இந்த நிகழ்ச்சியை தொடக்கத்தில் இருந்தே கோபிநாத் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.
இதில் இந்த வாரம் ‘சமையல் வேலை செய்பவர்கள் vs சமையல் வேலைக்கு பணி அமர்த்தியவர்கள்’ என்ற தலைப்பில் விவாதம் நடைபெறுகிறது. இதன் ப்ரோமோ வீடியோக்கள் விஜய் டிவியின் சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. அதில் ஒரு வீடியோவில், ‘சமையல் வேலை செய்பவர்கள்’ பகுதியில் இருக்கும் பெண்மணி ஒருவர் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அங்குள்ளவர்களிடம் ‘எதற்காக சமையல் வேலைக்கு செல்கிறீர்கள்?’ என்ற கேள்வியை முன்வைக்கிறார். அதில் ஒருவர், ‘நான் என் பசங்க சாப்பிடணும்ன்னு தான் வேலைக்கு போனேன். என்னுடைய கணவர் ரொம்ப குடிப்பாடு. ரொம்ப கஷ்டமான சூழல். அதனால் நான் முதலில் பண்ணியது ஒரு மருத்துவமனையில் துப்புரவு பணியாளர் வேலை பார்த்தேன். அங்க ஒருநாள் சமைக்க சொன்னாங்க. சமைச்சி கொடுத்தேன். பிடிச்சி போனதால அந்த வேலைக்கு பணியமர்த்திகிட்டாங்க’ என தெரிவிக்கிறார்.
தொடர்ந்து பேசிய இன்னொரு பெண், ‘எனக்கு அப்பா சரியில்லை. இந்த சைடுல இருக்குற எல்லாத்துக்கும் அப்பா இருந்துருக்காங்க. பழம் வித்து கூட படிக்க வச்சிருக்காங்க. அந்த பக்கம் இருக்கவங்க ஐ.டி.ல வேலை பார்க்குறாங்க. வீட்டு வேலைக்கு ஆள் வச்சிக்கிறாங்க. வீட்டுல மொத்தம் 4 பிள்ளைங்க. ஓரளவு சொத்தும் இருந்தது. ஆனால் எங்க அப்பா ரொம்ப குடிப்பார். அப்ப நான் 8ஆம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன். 13 வயசு ஆரம்பிச்ச நேரத்துல நான் வயதுக்கு கூட வரல, எங்கப்பா என்னைய பெங்களூரில் இருக்கும் ஊதுவத்தி தயாரிக்கும் கம்பெனிக்கு வேலைக்கு அனுப்பினார். அதுல 8 ஆண்டுகள் வேலை பார்த்தேன்.
அங்கு உடம்பு சரியில்லாமல் போகவே காசநோய் பாதிப்பு வந்தது, என்னுடைய கணவர் வந்த பிறகு தான் நான் நன்றாக இருக்கிறேன் என சொன்னார். எங்கப்பாவை போல கணவர் இல்லாதது மகிழ்ச்சியாக உள்ளது. ஜேசிபி வண்டி ஓட்டுறாரு. தினமும் 10,15 மணி நேரம் கூட ஓட்டுவாரு. நான் விரும்பி சமையல் வேலைக்கு போகல, எனக்கு நிறைய திறமை இருக்கு. ஆனால் நான் படிக்கல’ என தெரிவிக்கிறார்.
இதனைக் கேட்டு கோபிநாத், இங்கு சமையல் வேலை செய்யும் பெண்கள், அந்த வேலைக்கு போக காரணம் கணவர், அப்பா என சொன்னீர்கள். ஆனால் அதை விட குடி தான் இங்கு பல பிரச்சினைக்கு காரணமாக உள்ளது. இது நிறைய நிகழ்ச்சிகளில் தெரிய வருகிறது என கூறியுள்ளார்.