நீயா? நானா?
பிக் பாஸ், அது இது எது, ஸ்டார் மியூசிக் போன்ற ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போனது விஜய் தொலைக்காட்சி. அந்த வரிசையில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் “நீயா நானா” (Neeya Naana). சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளை, சாதாரண மனிதர்களை இரண்டு குழுக்களாக பிரித்து, இரு தரப்பினரின் கருத்துகளையும் கேட்டு, ஆராயும் நிகழ்ச்சியாக நீயா நானா பல ஆண்டுகளாக லைக்ஸ் அள்ளி வருகிறது.
வாரந்தோறும் ஞாயிற்றுகிழமை நண்பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த ஷோவை கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் இதுவரை பலதரப்பட்ட தலைப்புகள் குறித்து பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த வாரம் ‘நீயா நானா’ நிகழ்ச்சியில், ‘கணவரின் பணம் என் பணம்’ மற்றும் ‘பெண்களுக்கென்று தனிப்பட்ட பொருளாதார சுதந்திரம் வேண்டும்’ ஆகிய தலைப்புகளின் கீழ் விவாதம் நடந்தது.
‘கணவரின் பணம் என் பணம்’ என்று தோன்றிய தருணம்:
முதலில் “கணவனின் பணம் உங்களின் பணம் என்று எந்தத் தருணத்தில் உணர்ந்தீர்கள்?” என்று கோபிநாத் கேள்வியை முன்வைத்தார். இதற்கு, பதிலளித்த பெண்கள், மாத சம்பளம் கிடைத்தவுடன் லோன் போன்றவற்றை செலுத்திவிட்டு மீதமுள்ள பணத்தை தன்னுடைய அக்கவுண்டிற்கு தன்னுடைய கணவர் மாற்றி விடுவார் என்றும், அவருடைய தேவைக்குக் கூட தன்னிடம் தான் வாங்கிக் கொள்வார் என்று பெருமிதமாக தெரிவித்தார்.
மேலும், தான் வீட்டிற்கு ஒரே பெண் என்றும், தன்னுடைய அப்பா இறந்தபோது, அவர் விட்டு சென்ற கடனை, தன்னுடைய கணவன் தான் அடைத்தார். ஆனால் இதுவரை அவர் தன்னிடம் ஒரு வாத்தை கூட கேட்டதில்லை என்றும் மகிழ்ச்சியுடம் தெரிவித்தார். அதேபோன்று, மற்றொரு பெண், தன்னுடைய தங்கைக்கு கல்யாணம் நடத்தியதில் குடும்பத்தில் கடன் சுமை அதிகமாக இருந்ததது. அப்போது, அப்பா, அம்மா கஷ்டபட வேண்டாம் என்று கூறி, அந்த கடனை தன் கணவன் தான் அடைத்தார் என்றும் அதனை அவர் திருப்பி கூட கேட்கவில்லை என்றும் நெகிழ்ச்சியாக தெரிவித்தார்.
மேலும், சிலர், வேலைக்கு செல்லாத நேரத்திலும், குழந்தை பிறப்பு, தன்னுடைய கல்விக் கடன், தனக்கு தேவையானவற்றை வாங்கித் தருதல் உள்ளிட்ட தருணங்களில் கணவனின் பணம் தங்களது பணம் தான் என்று உணர நேர்ந்ததாகக் கூறினர்.
"கணவன் பணம் எங்கள் பணம் இல்லை”
ஆனால் கணவன் இவ்வாறு கொடுக்கும் பணத்திற்கு கணக்கு கேட்பதாகவும், அதனால் அந்தப் பணத்தை தங்களின் பணம் என்று உணர முடியாமல் போவதாகவும் எதிர்தரப்பினர் குற்றச்சாட்டை முன்வைத்தனர். அதன்படி, “கணவனிடம் கடன் வாங்கினால் அதனை அடுத்த மாதமே திருப்பி கொடுத்துவிடுவேன். கணவன் என்னிடம் அந்தப் பணத்தை கேட்டுவிடுவார் என்ற எண்ணத்தில் அதனை கொடுத்துவிடுகிறோம்” என்று ஒரு பெண் கூறினார்.
மேலும், தன்னுடைய மகனுக்கு ஒரு பரிசு வாங்க கூட கணவனிடன் காசு கேட்டு வாங்க வேண்டிய நிலை உள்ளது. அதேபோல தன்னுடைய கணவருக்கு ஒரு சட்டை வாங்க கூட அவரிடமே காசு வாங்க வேண்டி உள்ளது என்று ஒரு பெண் கூறினார்.
அதேபோல, மற்றொரு பெண், “கணவன் ஒரு 100 ரூபாய் கொடுத்துவிட்டு, அதனை 100 தடவை கணக்கு கேட்பார்” என்று கொந்தளித்த நிலையில், எதிர்தரப்பில் இருந்த ஒரு பெண், “கணக்கு கேட்பதில் என்ன தவறு? அதனை நாம் சொல்வதில் என்ன கஷ்டம்? உங்கள் பணமா இருந்தாலும், கணவன் பணமாக இருந்தாலும் கணக்கு போட்டு வைப்பதில் தவறில்லை” என்று கூறினார்.