பொருளாதார சுதந்திரம்:


ஆண், பெண் என்று இல்லாமல் பொருளாதார ரீதியான சுதந்திரம் என்பது அனைவருக்குமே தன்னம்பிக்கை தரக்கூடிய விஷயம். இருப்பினும், அந்த சுதந்திரம் அனைவருக்கும் அத்தனை எளிதாகக் கிட்டுவதில்லை. குறிப்பாக பெண்களுக்கு அது சவாலான விஷயம்தான். அதுவும் இல்லரசிகளாக இருக்கும் பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் என்பது எட்டாக்கனியாகவும் இருக்கும்.


ஆனால் இன்றைய சூழ்நிலையில் அதற்கு சாத்தியமில்லை. அதாவது வீட்டில் இருந்துக் கொண்டே எண்ணற்ற பெண்கள் சுயதொழில் செய்து வருமானம் ஈட்டி வருகின்றனர். சில பெண்கள் பல்வேறு துறைகளிலும் வேலை பார்த்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கு சுயமாக தனக்கு தேவையானவற்றை வாங்க முடிகிறது. சேமிப்பு அவர்களுக்கு சில முடிவுகளை உறுதியாக எடுக்க உதவுகிறது. இதனால் யாரையும் சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை.


நீயா நானா:


இப்படி இருக்கும் நிலையில், விஜய் டிவியில் பிரபல நிகழ்ச்சியாக வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்கு ஒளிப்பரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில், இந்த வாரம்,  ‘கணவரின் பணம் என் பணம்’ மற்றும் ‘பெண்களுக்கென்று தனிப்பட்ட பொருளாதார சுதந்திரம் வேண்டும்’ ஆகிய தலைப்புகளின் கீழ் விவாதம் நடந்தது.


இதில் பேசிய இருதரப்பினரும் தரமான கருத்துகளை எடுத்து வைத்து நிகழ்ச்சியை சிறப்பாக்கினர். அதன்படி, முதலில் “கணவனின் பணம் உங்களின் பணம் என்று எந்தத் தருணத்தில் உணர்ந்தீர்கள்?” என்று கோபிநாத் கேள்வியை முன்வைத்தார்.  இதற்கு, பதிலளித்த பெண்கள்,  மாத சம்பளம் கிடைத்தவுடன் லோன் போன்றவற்றை செலுத்திவிட்டு மீதமுள்ள பணத்தை தன்னுடைய அக்கவுண்டிற்கு தன்னுடைய கணவர் மாற்றி விடுவார் என்றும், அவருடைய தேவைக்குக் கூட தன்னிடம் தான் வாங்கிக் கொள்வார் என்று பெருமிதமாக தெரிவித்தார்.


மேலும், சிலர், வேலைக்கு செல்லாத நேரத்திலும், குழந்தை பிறப்பு, பிறந்து வீடு கடன், தன்னுடைய கல்விக் கடன் செலுத்தியது உள்ளிட்ட தருணங்களில் கணவனின் பணம் தங்களது பணம்தான் என்று உணர நேர்ந்ததாகக் கூறினர். 


கணவர் சம்பளத்தில் உரிமை உண்டு:


ஆனால் கணவர் இவ்வாறு கொடுக்கும் பணத்திற்கு கணக்கு கேட்பதாகவும், அதனால் அந்தப் பணத்தை தங்களின் பணம் என்று உணர முடியாமல் போவதாகவும் எதிர்தரப்பினர் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதற்கு பொங்கி எழுந்த ஒரு பெண் பேசியதாவது, “தற்காலிக சந்தோஷத்திற்காக நீங்கள் அடிப்படையான உரிமைகளை  விட்டுக் கொடுக்கிறீர்கள்.  கணவனின் பணம் உங்களின் பணம் தான்.  நீங்கள் வேலைக்குச் செல்லாமல் இருப்பதற்கு பல காரணங்களும் சூழ்நிலைகளும் உள்ளன.


மகப்பேறு விடுப்பால் வேலையை விடுவது, குடும்ப சூழ்நிலை, குழந்தையை பார்த்துக் கொள்வது இதுபோன்ற சூழ்நிலையில், நாம் வேலையை இழக்க நேரிடுகிறது. நாம் ஒரு விஷயத்துக்காக நம்முடைய வேலையை விடும்போது, கணவரின் சம்பளத்தில் உரிமை எடுத்துக் கொள்வது தவறில்லை” என்றார். அதேபோல், பெண்களுக்கு வேலைக்கே சென்றாலும், கணவரின் சம்பளத்தில் பெண்களுக்கு உரிமை உண்டு என்று ஒரு பெண் கறாராக பேசியது அரங்கத்தில் இருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.