சன் டிவியில் 2002ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை சின்னத்திரை ரசிகர்களை அரை மணி நேரத்திற்கு கட்டி போட்டு வைத்த ஒரு சீரியல் தான் 'மெட்டி ஒலி'. இயக்குநர் திருமுருகன் இயக்கி நடித்த இந்தத் தொடர் இன்று வரை மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு தொடர். ஒரு தந்தை தனியாக இருந்து ஐந்து பெண் பிள்ளைககளை எப்படி வளர்த்து ஆளாக்கி அவர்களை திருமணம் செய்து வைத்து, அவர்களின் குடும்பங்களில் ஏற்படும் சிக்கல்களை தீர்த்து வைத்து, குடும்ப ஒற்றுமைக்காக போராடுகிறார் என்ற கதைக்களத்தை மிகவும் அழகாக சித்தரித்து இருந்தார் இயக்குநர் திருமுருகன்!
ஐந்து சகோதரிகளின் கதை :
இந்த சீரியலில் ஐந்து சகோதரிகளாக காவேரி, காயத்ரி, வனஜா, உமா மற்றும் ரேவதி பிரியா நடித்திருந்தார்கள். அவர்களின் இயற்பெயர் மறந்து போகும் அளவிற்கு தனம், சரோ, லீலா, விஜி, பவானி என மெட்டி ஒலி சீரியலின் கதாபாத்திரங்களாகவே இன்று வரை அடையாளப்படுத்தப்படும் அளவிற்கு பிரபலமானது மெட்டி ஒலி சீரியல்.
விஜியாக நடித்த உமா :
மெட்டி ஒலி சீரியலில் நான்காவது மகளாக விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை உமா மகேஸ்வரி. அதே சீரியலில் லீலா கதாபாத்திரத்தில் நடித்த வனஜாவும் உமாவும் உண்மையிலேயே உடன் பிறந்த சகோதரிகள். மஞ்சள் மகிமை, ஒரு கதையின் கதை உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் 'ஈ பார்கவி நிலையம்' என்ற மலையாள திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார் உமா மகேஸ்வரி. 13 ஆண்டுகளாக மீடியாவில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வந்த உமா திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் இருந்து விலகினார்.
சொந்தமாக 'ஸ்ரீ சாய் பொட்டிக்' என்ற பொட்டிக் ஷாப் நடத்தி வந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான சமையல் போட்டியான 'கிச்சன் சூப்பர் ஸ்டார்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது சமைக்கும் திறனை வெளிப்படுத்தினார். பல ஆண்டுகளுக்குப் பிறகு விஜியை மீண்டும் திரையில் பார்த்ததில் அவரின் ரசிகர்கள் சந்தோஷப்பட்டனர்.
உடல்நல குறைவு :
ஆனால் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த உமாவுக்கு ஈரோட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 2021ம் ஆனது அக்டோபர் 17ம் தேதி உயிரிழந்தார். 40 வயதிலேயே அவர் காலமானது அவரின் குடும்பத்தினர் மட்டுமின்றி திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு மிக பெரிய அதிர்ச்சியாக இருந்தது.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி :
உமாவின் இறப்புக்கு பிறகு பல வதந்திகள் பரவி வந்த நிலையில் அவருக்கு மஞ்சள் காமாலை வந்து பின்னர் அது சரியான பிறகு ஏதோ ஹெல்த் பிரச்சினை ஏற்பட்டது. அவள் உடலும் ட்ரீட்மென்ட்டுக்கு ஒத்துப்போகவில்லை என தெளிவுபடுத்தி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் உமாவின் சகோதரியும் நடிகையுமான வனஜா.
உமாவின் மனக்கவலை :
“உமா என்றுமே வெளிப்படையாக விஷயங்களை ஷேர் செய்து கொள்பவர் அல்ல. அவருக்கு டிராவல் செய்வது, விதவிதமா உணவுகளை ட்ரை செய்வது எல்லாம் மிகவும் பிடிக்கும். மிகவும் ரசனையானவர். அவருக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். தனக்கு ஒரு குழந்தை இல்லை என்பது தான் மிகுந்த மனவேதனையை அவருக்குக் கொடுத்தது” என உமாவின் சகோதரி பகிர்ந்து இருந்தார்.
வாய்ப்புகள் கிடைத்தால் மீண்டும் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்ட உமா, அவரின் பயணத்தை விரைவிலேயே முடித்து கொண்டார். ஆனால் அன்றும் இன்றும் என்றும் மெட்டி ஒலி விஜியாகவே ரசிகர்கள் நெஞ்சங்களில் இருப்பார்!