சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் இயக்குநர் திருமுருகன். 1998ஆம் ஆண்டு தூர்தர்ஷன் சேனலில் ஒளிபரப்பான ‘கோகுலம் காலனி’ சீரியல் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பல தொடர்களை தூர்தர்ஷன் சேனலுக்காக இயக்கியவர். பின்னர் 2002ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான 'மெட்டி ஒலி' சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் ஒளிபரப்பான இந்த மெகா சீரியல் இன்று வரை ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்காத ஒரு இடத்தை பிடித்துள்ளது. 


 



 


பிரபலத்தைக் கொடுத்த மெட்டி ஒலி :


மெட்டி ஒலி சீரியலை இயக்கியதுடன் அதில் கோபி என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அது அவரை ரசிகர்களுக்கு மிக நெருக்கமாக கொண்டு சேர்த்தது. அந்த சீரியல் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 2010ஆம் ஆண்டு ‘நாதஸ்வரம்’ சீரியலை இயக்கினார். அதன் தொடர்ச்சியாக தேன் நிலவு, குல தெய்வம், கல்யாண வீடு உள்ளிட்ட சீரியல்களை இயக்கினார்.


வெள்ளித்திரை என்ட்ரி :


இடைப்பட்ட சமயத்தில் நடிகர் நாசர், சரண்யா, பரத், கோபிகா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'எம் மகன்' திரைப்படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். அதன் வெற்றியின் தொடர்ச்சியாக 'முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு' படத்தை இயக்கினார். அதற்கு பிறகு அவர் வேறு எந்த ஒரு சீரியலையோ அல்லது திரைப்படத்தையோ இயக்கவில்லை.  




90ஸ் கிட்ஸ்களின் கோரிக்கை :


சில காலங்களாக அவரின் கவனம் முழுக்க குறும்படங்கள், யூடியூப் வலைத்தள தொடர்கள் மீது மட்டுமே இருந்தது. அவர் மீண்டும் சின்னத்திரையில் கம் பேக் கொடுக்க வேண்டும் என்பது தான் 90ஸ் கிட்ஸ்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்த கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக லேட்டஸ்டாக அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார் இயக்குநர் திருமுருகன். 


புதிய அப்டேட் :


இயக்குநர் திருமுருகன் 'திரு டிவி' என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அந்த சேனல் வழியே புதிய அப்டேட் ஒன்றையும் கொடுத்துள்ளார். அதாவது இந்த ஆண்டில் அவரின் புதிய படைப்பு ஒன்று வர உள்ளது என தெரிவித்து இருந்தார். திருமுருகன் சீரியல்களுக்கு என்றுமே ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என்பதால் வர இருக்கும். இந்நிலையில், இந்த புதிய தொடர் என்னவாக இருக்கும் என யூகிக்க தொடங்கிவிட்டனர் ரசிகர்கள். இந்த ஆண்டில் தரமான ஒரு சீரியலை எதிர்பார்க்கலாம். விரைவில் இந்த அறிவிப்பு குறித்த முழுமையான தகவலை எதிர்பார்க்கலாம்.