விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ மற்றும் சீரியல்களுக்கு என்றுமே சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு உள்ளது. அந்த வகையில் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வந்த 'பாரதி கண்ணம்மா 2' நேற்றுடன் நிறைவடைந்தது அதை தொடர்ந்து புதிய சீரியலாக இன்று முதல் என்ட்ரி கொடுக்கிறது 'கிழக்கு வாசல்' (Kizhakku Vasal)தொடர். இன்று முதல் திங்கள் முதல் வெள்ளி வரை நாள்தோறும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது இந்த தொடர். 


ராதிகா சரத்குமாரின் ராடன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தத் தொடரில் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குநர் மற்றும் நடிகர் விஜய் தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர், ரேஷ்மா முரளிதரன் மற்றும் வெங்கட் ரங்கநாதன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மேலும் ரோஜா ஸ்ரீ, அஸ்வினி ராதாகிருஷ்ணா,சிந்து ஷியாம், ஆனந்த் பாபு, தரணி, பிரவீன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


 



 


 


சாமியப்பன் (எஸ்.ஏ. சந்திரசேகர்) தனது இரண்டு மகன்கள் மற்றும் வளர்ப்பு மகளான ரேணுகா (ரேஷ்மா முரளிதரன்) என ஒரு பெரிய குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள். குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் மீதும் மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்ட சுறுசுறுப்பான பெண்ணாக பார்த்து பார்த்து கவனித்து கொள்கிறார் ரேணுகா. சாமியப்பன் குடும்பத்தை சுற்றி நடக்கும் கதைக்களத்தை மையமாக வைத்து இந்தத் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. 


பொதுவாகவே கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் சவால்கள், இன்னல்கள், பிரிவுகள் இவை அனைத்தையும் சமாளித்து குடும்ப ஒற்றுமை கெடாதவாறு  ஒற்றுமையுடன் இருக்க பாடுபடுகிறார் ரேணுகா. அதே சமயத்தில் தான் ஒரு வழக்கறிஞராக வேண்டும் என கனவோடு இருக்கும் மகளுக்கு உறுதுணையாக இருக்கிறார் தந்தை சாமியப்பன். சண்முகம் (வெங்கட் ரங்கநாதன்) ரேணுகாவை விரும்பும் ஒரு கதாபாத்திரமாக நடித்துள்ளார். குடும்ப செண்டிமெண்ட் எப்போதுமே சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நன்றாக ஒர்க் ஆகும். அந்த வகையில் கிழக்கு வாசல் (Kizhakku Vasal) சீரியல் நிச்சயம் அனைவரின் பேராதரவை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இயக்குநர் விசுவின் 'சம்சாரம் அது மின்சாரம்' திரைப்படத்தின் கருவை கொண்டு இந்த சீரியல் உருவாக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.