சின்னத்திரையை பொறுத்தவரையில் என்றுமே முதலிடத்தில் இருக்கும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் ரசிகர்களுக்கு என்றுமே ஒரு ஸ்பெஷல் தான். சன் டிவியில் ஒளிபரப்பான பல மெகா சீரியல்கள் காலங்களை கடந்தும் மனதில் நீங்காத ஒரு இடத்தை பிடித்துள்ளது. அந்த வகையில் 'கோலங்கள்' சீரியல் மூலம் பிரபலமான இயக்குநர் திருச்செல்வத்தின் மற்றுமொரு படைப்பு தான் தற்போது சன் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் 'எதிர்நீச்சல்' தொடர்.
பெண்கள் அனைவரும் சாதிக்க பிறந்தவர்கள். எந்த தடங்கல் எது வந்தாலும் அவர்கள் எதிர்நீச்சல் போட்டு போராடி வென்று விடுவார்கள் என்ற கருவை மையமாக வைத்து ஒளிபரப்பாகும் இந்த தொடரில் ஆணாதிக்கம் நிறைந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த பெண்களை சுற்றிலும் நகரும் இந்த கதைக்களத்தில் ஆதி குணசேகரன் முக்கியமான கதாபாத்திரமாக இருந்து வருகிறது.
ஆதி குணசேகரனாக நடிகர் மாரிமுத்து நடித்து வந்த சமயத்தில் 'எதிர்நீச்சல்' டி.ஆர்.பி ரேட்டிங் யாரும் நெருங்க முடியாத அளவுக்கு முதலிடத்தில் இருந்து வந்தது. சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரட் சீரியலாக இருந்து வந்த எதிர்நீச்சல் சீரியல் திடீரென சரிவை சந்திக்க துவங்கியது. அதற்கு முக்கியமான காரணம் நடிகர் மாரிமுத்துவின் மறைவு. அவருக்கு பதிலாக ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிகர் வேல ராமமூர்த்தி இணைந்தார். அவர் அந்த கதாபாத்திரமாக என்ட்ரி கொடுத்த பிறகு கதைக்களத்தில் எக்கச்சக்கமான மாற்றங்கள். சம்பந்தமே இல்லாத கதைக்களமாக மாறியது.
பெண்களை மைய கருவாக வைத்து ஒளிபரப்பாகி வந்த தொடரில் பெண்கள் அடுத்தடுத்து வீழ்வதும் அவர்களை சூழ்ச்சியால் ஆதி குணசேகரன் வெல்வது போலவும் காட்சி அமைக்கப்பட்டு வந்தன. அது பெரும்பாலும் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் எதிர்நீச்சல் சீரியலுக்கான வரவேற்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைய துவங்கியது. அந்த வகையில் படிப்படியாக டி.ஆர்.பி ரேட்டிங்கும் குறைய துவங்கியது.
இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளது என்ற தகவல் சமூக வலைத்தளம் எங்கும் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. டி.ஆர்.பி ரேட்டிங்கில் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் சீரியலை முடிக்க சேனல் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஜூலை மாதத்துடன் சீரியல் முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது. எதிர்நீச்சல் சீரியலில் ஏகப்பட்ட ட்விஸ்ட்களை முடிவுக்கு கொண்டு வராமல் அப்படியே விட்டு வைத்துள்ளார் இயக்குநர் திருச்செல்வம். அதில் தற்போது தான் தர்ஷினி கடத்தல் மற்றும் அப்பத்தா கொலைக்கான காரணம் யார் என்பதை போலீஸ் கண்டுபிடித்து குணசேகரனை கைது செய்துள்ளது.
பெண்கள் அனைவருக்கும் இப்போது தான் அவரவர்களின் திறமைக்கேற்ற ஒரு பிளாட்பாரம் அமைந்துள்ளது. அதை சரியாக பயன்படுத்தி அவர்கள் எப்படி முன்னேற போகிறார்கள்? அருணுடம் ஆதிரை திருமணம், குணசேகரனுக்கான தண்டனை இப்படி பல முடிச்சுகள் இந்த ஒரு மாத கால அவகாசத்தில் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் எதிர்நீச்சல் சீரியல் முடிவு குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை. கூடிய விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.